Published : 13 Feb 2018 08:23 AM
Last Updated : 13 Feb 2018 08:23 AM

சர்ச்சைகளால் பிரபலமாகும் தீபா –மாதவன்

ஜெ

யலலிதாவின் அண்ணன் மகளான தீபா, மாதவனை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்ததால் அதிமுகவினர் சிலர் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி ‘எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை’ என்ற அமைப்பை தொடங்கினார். பொறுப்பாளர்கள் நியமனத்தில் மாதவனுக்கும் தீபாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தீபாவுக்கு போட்டியாக மாதவன் தனியே பொறுப்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார்.

தீபாவின் நடவடிக்கைகளால் கடும் அதிருப்தி அடைந்த மாதவன், ‘எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையில் சில தீய சக்திகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. தீபா தனித்து செயல்படவில்லை’ என குற்றம்சாட்டினார். பின்னர் வீட்டைவிட்டு வெளியேறினார்.

சில நாட்கள் கழித்து புதிய கட்சியை தொடங்கிய மாதவன், ‘தீபாவை முதல்வராக்குவதே தனது கட்சியின் நோக்கம்’ என்றார். பின்னர் மீண்டும் தீபாவுடன் இணைந்து செயல்படத் தொடங்கினார்.

தீபாவும் மாதவனும் தொடர்ந்து முன்னுக்குப்பின் முரணாக பேசியும், முடிவுகளை மாற்றியும் வந்ததால் அவர்களுடன் இருந்த நிர்வாகிகள் ஒவ்வொருவராக விலகத் தொடங்கினர்.

தீபா பேரவையில் பொறுப்புகளைப் பெற லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக தீபா மீது புகார் தரப்படும் என பேரவை நிர்வாகி ராமச்சந்திரன் என்பவர் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, தனது வீட்டில் சிலர் கல் வீசி தாக்குதல் நடத்தியதாக போலீஸாரிடம் தீபா ஒரு புகார் அளித்தார். ஆனால், போலீஸ் விசாரணையில் ராமச்சந்திரனைச் சிக்க வைக்க தீபாவின் கார் ஓட்டுநர் ராஜாதான் கல்வீச்சு நாடகத்தை அரங்கேற்றியது தெரியவந்தது. அதன்பின், ஆட்டோ டிரைவருடன் ஏற்பட்ட மோதல் தொடர்பான புகாரில் ராஜாவை மாம்பலம் போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

மோசடி புகாரில் சிக்கிய ராஜாவை பேரவை பொறுப்புகளில் இருந்து நீக்குவதாக அறிவித்தார் தீபா. அடுத்த சில நாட்களிலேயே ராஜாவை மீண்டும் பேரவையில் இணைத்துக்கொண்டார்.

தற்போது தீபா வீட்டில் வருமான வரி சோதனை என்ற நாடகம் அரங்கேறியுள்ளது. பெரும்பாலும் அதிகாலையில் தீபா எழுந்திருக்கவே மாட்டார். வற்புறுத்தி அழைத்தால் மட்டுமே ஏதேனும் விழாக்களுக்கு செல்ல தீபா அதிகாலையில் வருவார். மற்ற நாட்களில் அவர் கிளம்பவே மதியம் ஆகும் என அவரது கட்சி நிர்வாகிகளே தெரிவிக்கின்றனர். ஆனால், போலி வருமானவரி அதிகாரி சோதனை நடத்த வந்த நாளில் தீபாவும் ராஜாவும் அதிகாலையிலேயே வீட்டில் இருந்து வெளியே சென்றுவிட்டனர்.

மோசடி புகாரை திசை திருப்பவே வருமானவரி சோதனை நாடகம் அரங்கேறியுள்ளதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதில் தீபாவுக்கும், ராஜாவுக்கும் பங்கு இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x