Published : 11 Feb 2018 02:43 PM
Last Updated : 11 Feb 2018 02:43 PM

ஜெயலலிதாவின் படத்தை பேரவையில் திறக்கும் கருப்பு நடவடிக்கையில் திமுக பங்கேற்காது: ஸ்டாலின்

ஜெயலலிதாவின் படத்தை பேரவையில் திறக்கும் கருப்பு நடவடிக்கையில் திமுக பங்கேற்காது என்று அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சென்னை, அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''சட்டப்பேரவை விதிமுறைகளுக்குட்பட்டு பேரவையை அமைதியாக நடத்துவது மட்டுமே பேரவைத் தலைவரின் கடமை. ஆனால், உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை பேரவையில் அவர் திறந்து வைப்பது, சட்டவிதிகளுக்கு முரணானது. எனவே, இதுவொரு கருப்பு நடவடிக்கை என திமுக சார்பில் நான் கண்டிக்கிறேன்.

அதுமட்டுமல்ல, குற்றவாளியான ஜெயலலிதாவின் புகைப்படங்கள் அரசு அலுவலகங்களில் வைக்கக்கூடாது என்று எங்களுடைய சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் தொடர்ந்துள்ள வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. நாளைய தினம் அந்த வழக்கு விசாரணை வரவிருக்கின்ற காரணத்தால், அவசர அவசரமாக முடிவு செய்து, தீர்ப்பு வருவதற்கு முன்பாக காலை ஒன்பதரை மணிக்கே படத்தை திறக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இது சாதாரண காரியமல்ல.

காரணம், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜெயலலிதாவையும் சேர்த்து மொத்தம் 4 பேர் குற்றவாளிகள் என தெளிவாக தீர்ப்பளித்து இருக்கின்றனர். அந்த தீர்ப்பின் 540-வது பக்கத்தில் A1 to A4 என்பதில் ஏ1 ஆக இருக்கும் ஜெயலலிதா இறந்துவிட்ட காரணத்தால் சிறைக்கு செல்லவில்லையே தவிர, குற்றவாளி என்பதில் மாற்றமில்லை. எனவே, ஒரு குற்றவாளியின் படத்தை பேரவையில் வைப்பது கடும் கண்டனத்துக்கு உரியது. எனவே, அந்த விழா நடைபெற்றால், அதை திமுக கண்டிப்பதோடு மட்டுமல்ல, அவ்விழாவில் நிச்சயம் பங்கேற்காது''.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x