Last Updated : 11 Feb, 2018 01:14 PM

 

Published : 11 Feb 2018 01:14 PM
Last Updated : 11 Feb 2018 01:14 PM

தமிழகத்தில் எதுவும் சரியில்லை: கமல் கடும் தாக்கு

 தமிழகத்தில் எதுவுமே சரியில்லை; ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து உலகின் சிறந்த கிராமமாக மாற்ற திட்டமிட்டுள்ளேன் என்று நடிகர் கமல்ஹாசன் ஹார்வர்டு பல்கலையில் பேசினார்.

அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள ஹார்வாட் பல்கலைக்கழகத்தில் பிசினஸ் ஸ்கூல் ஆப் நிகழ்ச்சியிலும், வருடாந்திர இந்திய மாநாட்டிலும் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்றார்.

தமிழரின் பாரம்பரிய வேட்டி, சட்டையில் நிகழ்ச்சிக்கு வந்த கமல்ஹாசனை ரசிகர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினராகப் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசனுடன் மூத்த பத்திரிகையாளர் பர்கா தத் கலந்துரையாடினார்.

அப்போது, தமிழகத்தின் அரசியல் சூழல் குறித்து கமல் கடுமையாக விமர்சித்தார், தனது எதிர்காலத் திட்டம் குறித்து பல்வேறு விஷயங்களை கமல்ஹாசன் குறிப்பிட்டார்.

அவர் பேசியதாவது:

''தமிழகத்தில் அரசியல் சூழல் உள்ளிட்ட எதுவுமே சரியில்லை. நான் புதிய அரசியல் கட்சி தொடங்கியதற்கான காரணமே மக்களிடம் பேசுவதற்காகத்தான், அரசியல்வாதிகளுடன் பேசுவதற்காக அல்ல.

மகாத்மா காந்தியின் கனவான சுயசார்பு மற்றும் தன்னிறைவு கொண்டதாக கிராமங்களை மாற்ற விரும்புகிறேன். இதற்காக மாவட்டத்தில் ஒவ்வொரு கிராமத்தையும் தத்தெடுத்து, அதை உலக அளவுக்கு சிறந்த கிராமமாக மேம்படுத்த திட்டம் என்னிடம் இருக்கிறது.

நானும் ரஜினிகாந்தும் மிகச் சிறந்த நண்பர்கள்தான். ஆனால், அரசியல் என்பது வேறு. மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதுதான் எனது நோக்கமும், நண்பர் ரஜினியின் நோக்கமும் ஆக இருக்கிறது.

கூட்டணி குறித்து கேட்டால், எதிர்காலத்தில் அவர் தொடங்கும் கட்சியுடன் தேர்தல் கூட்டணி வைக்கமாட்டேன் என்று இப்போது கூற இயலாது.

எங்களின் சிந்தாந்தங்களுக்கும், கொள்கைகளுக்கும் இடையே சில ஒற்றுமைகள் இருந்தால், தேர்தல் அறிக்கைகள் அதற்கு ஏற்றார்போல் இருந்தால், இரு கட்சிகளுக்கு இடையே கூட்டணி இருக்கும்.

அதேசமயம், எனது நிறம் கறுப்பு, ரஜினியின் நிறம் காவியாக இருக்காது என நம்புகிறேன். தேவைப்பாட்டால் ரஜினியுடன் மட்டுமல்லாமல் மற்ற கட்சிகளுடன் இணைந்து செயலாற்றுவேன்.

ஆனால், தேர்தலுக்கு முந்தைய கூட்டணி இருக்குமே தவிர, தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி இருக்காது.

தேர்தல் முடிவுகளில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால்கூட அது மக்களின் தீர்ப்பாக ஏற்றுக்கொள்வேன். அதற்காக நான் வேறுயாருடனும் கூட்டணிக்காக காத்திருக்கவும் மாட்டேன், பேரம் பேசவும் மாட்டேன். மக்கள் எனக்கு அடுத்த வாய்ப்பு கொடுக்கும் வரை காத்திருப்பேன்.

அதேசமயம், எனக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால், மக்கள் அளித்த வாய்ப்பை பயன்படுத்தி எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதையும் விரும்புகிறேன்.

நாட்டில் ஒரு சிலர் கூறும் (இந்து பெண்களை முஸ்லிம்கள் மணப்பது) லவ் ஜிகாத், ஜிகாத் குறித்தும் எனக்கு ஏதும் தெரியாது. ஆனால், ஒரு புதிய புரட்சி வந்து கொண்டு இருக்கிறது. அந்தப் புரட்சி வெறுப்புணர்வை, வெறுப்புணர்ச்சியை காதலால், அன்பால் வெல்லும்.

டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கேஜ்ரிவால் என்னை சென்னையில் சந்தித்துப் பேசினார் அப்போது. தன்னுடன் கூட்டணி வைப்பது குறித்தும் பேசினார்.

நானும் அதை கருத்தில் கொண்டு இருக்கிறேன். அவருடன் மட்டுமல்ல மற்ற தலைவர்களும் கேட்டு இருக்கிறார்கள்.

நான் தொடங்கும் கட்சிக்கு உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் ஆதரவு அளிப்பார்கள், தங்களின் கருத்துகளையும் தெரிவிக்க வேண்டும் என கேட்கிறேன். தேர்தல் சமயத்தில் அதற்கான நிதி மக்களிடம் இருந்து கிடைக்கும் என்பதில் நம்பிக்கையாக இருக்கிறேன்.''

இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x