Published : 11 Feb 2018 12:07 PM
Last Updated : 11 Feb 2018 12:07 PM

ஊழல் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை சட்டப்பேரவையில் திறப்பதா?- ஸ்டாலின் எதிர்ப்பு

அரசியல் சட்டத்துக்கும், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கும் விரோதமாக ஊழல் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை திறந்து சட்டப்பேரவையின் மாண்பை குலைக்கக் கூடாது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மக்கள் வழங்கிய ஆட்சி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, வருமானத்திற்கு அதிகமாக பலமடங்கு சொத்துகுவித்த ஊழல் வழக்கில் முதல் குற்றவாளி என்று உச்ச நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை, மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பாகத் திகழும் சட்டப்பேரவையில், பேரவைத்தலைவர் திறந்து வைப்பதற்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பேரவைத்தலைவருக்கு சபையின் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த மட்டுமே அதிகாரம் இருக்கிறதே தவிர, சபையின் கண்ணியத்தையும், கவுரவத்தையும் குறைக்கும் வகையிலோ, மாசுபடுத்திடும் வகையிலோ, ஓர் ஊழல் குற்றவாளியின் படத்தை அங்கு திறப்பதற்கு எவ்வித அதிகாரமும், தார்மீக உரிமையும் இல்லை. அரசியல் சட்ட நெறிமுறைகளுக்கு உட்பட்டுதான் சட்டமன்ற விதிகள் உருவாக்கப்பட வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளபோது, அந்த அரசியல் சட்ட நெறிமுறைகளுக்கே எதிராக ஊழல் குற்றவாளி ஒருவரின் படத்தை சட்டப்பேரவைக்குள் திறந்து வைப்பது சட்டப்பேரவை வரலாற்றில் ஒரு கருப்பு நடவடிக்கை ஆகும்.

கடந்த 14.2.2017 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ் மற்றும் அமிதாவ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஜெயலலிதா ஊழல் குற்றவாளி என்பதை தெளிவாக கூறியிருக்கிறது. தங்களது தீர்ப்பின் 540-வது பத்தியில், 'ஊழல் வழக்கின் ஆதாரங்களை எல்லாம் ஆராய்ந்து பார்த்து முதல் குற்றவாளியும் (மறைந்த ஜெயலலிதா) சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் கூட்டுச்சதி செய்தார்கள் என்ற முடிவுக்கு வருகிறோம். அந்த கூட்டுச்சதியின் மூலம் கிடைத்த வருமானத்தை, பொது ஊழியராக இருந்த முதல் குற்றவாளியான ஜெயலலிதா தனக்கு முகமூடி அணியாக செயல்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெயரிலும், நிறுவனங்கள் மற்றும் கம்பெனிகள் பெயரிலும் முதலீடு செய்தார் என்றும் முடிவு செய்கிறோம்'' என்று தீர்ப்பளித்து, முதல் குற்றவாளியான ஏ1 முதல் ஏ4 வரை அனைவரும் கூட்டுச்சதியில் ஈடுபட்டு ஊழல் செய்தார்கள் என்று உச்ச நீதிமன்றமே உறுதி செய்திருக்கிறது.

தீர்ப்பு வெளிவந்த நேரத்தில் ஜெயலலிதா உயிருடன் இல்லை என்ற காரணத்தால் மட்டுமே அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்படவில்லையே தவிர, பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா, ''ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் குற்றவாளிகளே'' என்று அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அப்படியே அட்சரம் பிசகாமல் ஏற்றுக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.

கர்நாடக உயர் நீதிமன்றம் கூட ஜெயலலிதா ஊழல் செய்யவில்லை என்று கூறவில்லை. அந்த தீர்ப்பின் 915-வது பக்கத்தில், ஒரு தப்புக்கணக்கைப் போட்டு, கூட்டல் பிழைசெய்து, அதன்மூலம் கூட ஜெயலலிதா 8.12 சதவீதம் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்துள்ளார் என்றே நீதிபதி குமாரசாமி சுட்டிக்காட்டி இருந்ததை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் கேன்சர் நோயை உருவாக்கும் தடைசெய்யப்பட்ட குட்கா போதைப்பொருட்களின் தாராளமான விற்பனையைப் பகிரங்கப்படுத்த சட்டப்பேரவைக்குள் குட்கா பாக்கெட்டுகள் கொண்டு வந்தது, 'அவை மீறல்' என திமுக உறுப்பினர்களுக்கு அவைமீறல் நோட்டீஸ் கொடுத்துள்ள பேரவைத்தலைவர், இன்றைக்கு ஊழல் குற்றவாளியின் படத்தை சட்டப்பேரவைக்கு உள்ளேயே திறந்து வைக்கவும், அவையின் கண்ணியத்தையும், உரிமையையும் பேரவைத்தலைவரே மீறவும் முற்பட்டு இருப்பது, ஜனநாயக நெறிமுறைகளையும், மக்களாட்சி தத்துவத்தின் மாண்புகளையும் ஆழக் குழி தோண்டிப் புதைக்க பேரவைத்தலைவர் துணிந்து விட்டார் என்பதை வெளிக்காட்டுகிறது.

இதன்மூலம், சட்டப்பேரவையின் மாண்பிற்கு உயிரோட்டமுள்ள சின்னமாகத் திகழும் பேரவைத்தலைவர் பதவியில் அமர்ந்திருக்கும் தனபால், பேரவைத்தலைவருக்கு உரிய மாண்பை இழந்து நிற்கிறார். ஒரு அவையில், 'அவைக்கு ஒவ்வாத சொற்களை நீக்கும்' அதிகாரம் படைத்த பேரவைத்தலைவர், இன்றைக்கு, 'அவைக்கு ஒவ்வொத ஊழல் குற்றவாளியின் படத்தை' திறந்து வைக்கப் போகிறார் என்பது தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இழுக்கு.

குறிப்பாக, ஜெயலலிதாவின் படங்களை அரசு அலுவலகங்கள் மற்றும் அரசின் செயல்பாடுகளில் பயன்படுத்துவது குறித்து திமுகவின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கு திங்கள்கிழமை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருக்கின்ற நிலையில், அவசர அவசரமாக இப்படி ஜெயலலிதா படத்தை பேரவைத்தலைவர் திறந்து வைப்பது, உயர் நீதிமன்ற மாண்பை மீறும் செயல் என்றே கருதுகிறேன்.

ஆகவே, அரசியல் சட்டத்திற்கும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கும் விரோதமாக ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவின் படத்தை தமிழக சட்டப்பேரவையில் திறந்து வைத்து, ஏற்கெனவே அந்த மாமன்றத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படங்களின் மாண்பைக் குறைத்திடும் மாபெரும் தவறை செய்யக்கூடாது என்று பேரவைத் தலைவரை, பிரதான எதிர்க்கட்சியான திமுக சார்பில் மன்றாடி கேட்டுக் கொள்வது எனது கடமையாகும்.

பொதுவாழ்வில் நேர்மை, அரசியலில் நல்லொழுக்கம் என்ற உயர்ந்த கோட்பாடுகளே சட்டப்பேரவை ஜனநாயகத்தின் இலக்கணமாக திகழ வேண்டும். ஆகவே, மக்களாட்சித் தத்துவத்தின் அடித்தளமாக விளங்கும் சட்டப்பேரவை மாண்பினை இழிவுபடுத்தும் போக்கை பேரவைத் தலைவர் உடனே கைவிட வேண்டும்'' என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x