Published : 11 Feb 2018 09:34 AM
Last Updated : 11 Feb 2018 09:34 AM

நிதி தருவதில் திட்டமிட்டு காலம் தாழ்த்தும் மத்திய அரசு: மாற்றாந்தாய் மனப்போக்குடன் செயல்படுவதாக முதல்வர் நாராயணசாமி கடும் கண்டனம்

எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி தருவதில் திட்டமிட்டு காலம் தாழ்த்தி வருகிறது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:

டெல்லி சென்று மத்திய நிதி அமைச்சரை சந்தித்து திட்டமில்லா செலவிற்கு புதுச்சேரி அரசுக்கு தர வேண்டிய ரூ.1,483 கோடி, ஏழாவது ஊதியக்குழு பாக்கி ரூ.1,055 கோடி, ஆறாவது ஊதியக்குழு பாக்கித்தொகை ரூ.1,352 கோடி, தானே புயல் பாக்கித்தொகை ரூ.70 கோடி, தனி கணக்கு ஆரம்பிப்பதற்கு முன்பு இருந்த கடன் தொகை ரூ.2,177 கோடி உள்ளிட்ட மொத்தம் மத்திய அரசு தரவேண்டிய ரூ.6,262 கோடியை தர வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

மத்திய நிதி அமைச்சரும் நிதி செயலரை அழைத்து புதுச்சேரிக்கு நிதியை தருவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி கூறியுள்ளார். புதுச்சேரி அரசு கேட்ட நிதியை தர மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புக் கொண்டது. ஆனால் துரதிருஷ்டவசமாக மத்திய நிதித்துறை ஒப்புக் கொள்ளவில்லை.

ஆந்திரத்திலும் இதே நிலை

எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி தருவதில் திட்டமிட்டு காலம் தாழ்த்தி வருகிறது. ‘பிரதமர் மோடி தங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை’ என ஆந்திர முதல்வர் கூட குற்றம் சாட்டியுள்ளார்.மத்திய அரசு மாநிலத்திற்கு மாநிலம் ஒரு மாதிரியாக, மாற்றாந்தாய் மனப்போக்குடன் செயல்படுகிறது. சட்டப்பேரவை உள்ள டெல்லி யூனியன் பிரதேசத்தில் ஒய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தை மத்திய அரசு தருகிறது. ஆனால் புதுச்சேரியில் தரவில்லை. 10 ஆண்டிற்கு முன்பு வாங்கப்பட்ட கடன்களை அடைத்து வருகிறோம். கடந்த ஜனவரியில் ரூ.127 கோடி செலுத்தியுள்ளோம். இந்த மாதம் ரூ.100 கோடி செலுத்த உள்ளோம். அடுத்த மாதம் ரூ.177 கோடி செலுத்த வேண்டியுள்ளது. இதனால் சிக்கன நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

சிக்கலான சூழலுக்கு

தள்ளும் மத்தியஅரசு

புதுச்சேரியை மத்திய நிதி கமிஷனில் சேர்க்க வேண்டும் என மத்திய அரசு வாக்குறுதி அளித்தது. ஆனால் இதுவரை பதில் இல்லை. எனவே நிதிக்குழு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளேன். சட்டப்பேரவை உள்ள புதுச்சேரியை நிதிக்குழுவில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன். தற்போது 27 சதவீத நிதிதான் மத்திய அரசிடமிருந்து கிடைக்கிறது. நிதிக்குழுவில் சேர்த்தால் 42 சதவீத நிதி கிடைக்கும்.

ரூ.7 ஆயிரம் கோடிக்கான பட்ஜெட்டில் ரூ.4 ஆயிரம் கோடி மாநில அரசின் வருவாய், மீதியுள்ள 3 ஆயிரம் கோடியில் 576 கோடியை மட்டுமே மத்திய அரசு தருகிறது. மீதித்தொகை வெளிச்சந்தை மற்றும் நபார்டு, ஹட்கோ மூலம் திரட்டி வருகிறோம். அதனால் வட்டி கட்டும் நிலை உள்ளது. எனவே புதுச்சேரி அரசு நிதியில் சிக்கலான சூழ்நிலையில் உள்ளது.

பிரதமரை சந்தித்து பேசுவேன்

பிரதமர் 24ந் தேதி புதுச்சேரி வருகை புரிகிறார். குறிப்பாக ஆரோவில் 50ம் ஆண்டு விழாவில் பங்கேற்க உள்ளார். புதுச்சேரி அரசு சார்பில் சென்னை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரி துறைமுகத்திற்கு சரக்குகளை கொண்டு வரும் திட்டம் நிறைவேற்ற ஏற்கெனவே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதற்கான வெள்ளோட்டம் 12ந் தேதி நடைபெற உள்ளது. இத்திட்டத்தை தொடங்கி வைக்க வேண்டும் என பிரதமரை கேட்டுள்ளோம்.

மேலும் புதுச்சேரி நிதி பற்றி நானும் அமைச்சர்களும் சந்தித்து பேசவும் நேரம் கேட்டுள்ளோம். பிரதமர் நேரடியாக தலையிட்டு புதுச்சேரிக்கு கிடைக்க வேண்டிய நிதியை தர வேண்டும் என கோரிக்கை வைக்க உள்ளோம். பிரதமரை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். துறைமுகம் தூர்வார்வதற்கான கட்டணத்தில் 50 சதவீதம் ரூ.7 கோடியை டிசிஐ நிறுவனத்திடம் கொடுத்துவிட்டோம். முகத்துவாரம் தூர்வாரும் பணி மார்க் நிறுவனம் மூலம் மேற்கொண்டு முடித்துள்ளோம். இதனால் துறைமுகம் செயல்பாட்டிற்கு தயாராக உள்ளது, என்றார்.

ஜிப்மருக்கு நிலம் ஒதுக்கீடு

மேலும் முதல்வர் கூறும்போது, “ஜிப்மரில் ரூ.800கோடியில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதற்கு தேவையான நிலத்தை தர புதுச்சேரி அரசு ஒப்புக்கொண்டது. அதனை அடுத்து சேதராப்பட்டு கரசூரில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கான இடத்தில் 50 ஏக்கரை ஜிப்மருக்கு அரசு இலவசமாக வழங்கியுள்ளது. தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக இந்த மையம் அமைக்கப்பட உள்ளது.

இதுபோல் காரைக்காலைப்போல் ஏனாமிலும் ரூ.50 கோடியில் ஜிப்மர் மருத்துவ பரிசோதனை மையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதற்கான நிலத்தை மாநில அரசு தரும்.

புதுச்சேரி கடற்கரையில் வம்பாகீரப்பாளையம் முதல் சோலை நகர் வரை மற்றொரு சாலை ரூ.42 கோடியில் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் கடற்கரை அழகுபடுத்துவதோடு மட்டுமின்றி, சுற்றுலா பயணிகளுக்கும் பாதை அமையும். விளக்கு வெளிச்சம் முழுமையாக நிரம்பி இருக்கும்.

வெளிநாட்டு மணல் இறக்குமதி

புதுச்சேரியில் மணல் தட்டுப்பாடு பெரிய அளவில் உள்ளது. தமிழகத்தில் இருந்து மணல் அளிக்க அரசு ஒப்புக்கொண்டாலும் முடிவு எடுக்க காலதாமதம் ஆவதால் வருவது சிக்கலாக உள்ளது.

எனவே வெளிநாட்டில் இருந்து மணலை இறக்க தரமாக இருப்பதற்கும், விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. இது அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். இதன் மூலம் புதுச்சேரி காரைக்காலில் மணல் தட்டுப்பாடு நீங்கும். மலேசியா, தாய்லாந்து, கம்போடியா ஆகிய நாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்யப்படும்.

20-ம் தேதி கடையடைப்பு

நடைபெறுமா?

வரி உயர்வுகளை கண்டித்து புதுச்சேரியில் 20-ம் தேதி நடத்துவதாக அறிவித்துள்ள கடை அடைப்பு போராட்டத்திற்கு வர்த்தக சபை ஆதரவு இல்லை என கூறியுள்ளது. வியாபார கூட்டமைப்பும் பல பிரிவாக உள்ளது. அதிலும் பலர் ஆதரவு தரவில்லை. வர்த்தக சபையினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்று கூறினார்.

‘நாட்டில் பாராளுமன்றத்திற்கும், சட்டப்பேரவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும்’ என்று கூறப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அதற்கு முதலில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை திருத்தம் செய்ய வேண்டும். இரண்டு தேர்தல்களையும் ஒன்றாக நடத்துவது என சொல்வது சுலபம்; செய்வது கஷ்டம். நடைமுறைப்படுத்த முடியாத ஒன்று’’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x