Published : 11 Feb 2018 09:18 AM
Last Updated : 11 Feb 2018 09:18 AM

சிசிடிவி கேமரா, வை-பை உட்பட 11 புதிய வசதிகளுடன் சதாப்தி ரயிலில் புதுப்பிக்கப்பட்ட பெட்டி: நேற்று முதல் இணைத்து சோதனை முறையில் இயக்கம்

சதாப்தி விரைவு ரயிலில் சிசிடிவி கேமரா, வை-பை வசதி, சொகுசு இருக்கைகள் உட்பட 11 புதிய வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட பெட்டி நேற்று முதல் இணைத்து இயக்கப்பட்டது.

நாடுமுழுவதும் உள்ள சதாப்தி, ராஜ்தானி விரைவு ரயில்களில் தரம் உயர்த்தி, பயணிகளுக்கு சிறப்பான சேவையை வழங்க வேண்டுமென ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ரயில்வே உள்ள சதாப்தி விரைவு ரயில்களில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

மேம்படுத்தப்பட்ட தோற்றம்

இதேபோல், தெற்கு ரயில்வே யின் சென்னை கோட்டத்தில் இயக்கப்படும் சதாப்தி விரைவு ரயில்களிலும் இதற்கானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெரம்பூர் ஐசிஎப் இணைப்பு பெட்டி தொழிற்சாலை யில் 2008-ல் உருவாக்கப்பட்ட பெட்டியை எடுத்துக் கொண்டு உட்புறம் மற்றும் வெளிப்புறத் தோற்றம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

பயணிகளைக் கவரும் வகையில் உட்பகுதி நவீனமயமாக்கப்பட்டுள்ளது. நவீன சொகுசு இருக்கைகளாக மாற்றப்பட்டுள்ளன. தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் ஆங்கில மொழியில் திரைப்படங்கள், குழந்தைகளுக்கான படங்கள், இந்தியன் ரயில்வே வீடியோவை செல்போன் மூலம் காணும் வகையில் வை-பை வசதி, சிசிடிவி கேமராக்கள், புதுப்பிக்கப்பட்ட கழிவறை வசதிகள், மாற்றுத்திறனாளிகள் தங்கள் இருக்கையைக் கண்டறியும் வகையில் புதிய வசதி உட்பட மொத்தம் 11 புதிய வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பெட்டிக்கு ரூ.10 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. சென்னை ரயில் கோட்ட இயந்திரவியல் முதன்மை தலைமை பொறியாளர் அனில் கத்பால் புதுப்பிக்கப்பட்டுள்ள பெட்டியை சமீபத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் மூத்த கோட்ட பொறியாளர் ஆர்.பரிமளகுமார் உட்பட அதிகாரிகள் பலரும் உடனிருந்தனர்.

புதிய பயண அனுபவம்

இதுதொடர்பாக சென்னை கோட்ட இயந்தரவியல் பிரிவு உதவி பொறியாளர் துஷார் ஆதித்யா கூறும்போது, ‘‘சிசிடிவி கேமரா, வை-பை உட்பட மொத்தம் 11 புதிய வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட இந்த புதிய வகை பெட்டி, பயணிகளுக்கு புதிய பயண அனுபவத்தை அளிக்கும்.

இந்த புதுப்பிக்கப்பட்ட பெட்டி சென்னை சென்ட்ரல் - மைசூர் சதாப்தி விரைவு ரயிலில் நேற்று முதல் இயக்கப்பட்டது.

அடுத்த 3 மாதங்களுக்கு சோதனை முறையில் இயக்கப்படும். அடுத்தடுத்து, மொத்தமுள்ள 12 பெட்டிகளும் நீக்கப்பட்டு, இந்த புதுப்பிக்கப்பட்ட பெட்டிகள் இணைக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர் சதாப்தி விரைவு ரயிலில் இந்த புதுப்பிக்கப்பட்ட பெட்டிகள் வரும் ஏப்ரல் மாதத்துக்குள் இணைத்து இயக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x