Published : 11 Feb 2018 09:15 AM
Last Updated : 11 Feb 2018 09:15 AM

அறிவியல் போட்டிகளில் வெற்றி பெற்றதால் கல்விச் சுற்றுலா: நாசா செல்லும் மாநகராட்சி பள்ளி மாணவர்கள்

சென்னை மாநகராட்சி அளவில் நடத்தப்பட்ட அறிவியல் போட்டிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவிகள் 8 பேர் சென்னை கிழக்கு ரோட்டரி சங்கம் சார்பில் அமெரிக்காவின் நாசா விண் வெளி ஆய்வு மையத்துக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

சென்னை மாநகராட்சி கல்வித் துறை, சென்னை கிழக்கு ரோட்டரி சங்கம் சார்பில் மாணவர்களின் அறிவுத்திறனை வளர்க்கும் வகையில் ‘விங்ஸ் டு ஃபிளை’ என்ற திட்டம் கடந்த 2 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் அறிவியல் சார்ந்த பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகள் மலேசியா, ஜெர்மனிக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்ற னர்.

இந்தக் கல்வியாண்டில் சென்னை மாநகராட்சியில் உள்ள 70 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இடையே அறிவியல் சார்ந்த போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் முதல் சுற்றில் 420 மாணவர்கள், 2-வது சுற்றில் 32 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதன் இறுதிச்சுற்று ஷெனாய் நகரில் நேற்று நடந்தது. அதில், மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் ஆதவன், கோபிநாத், காவியாஞ்சலி, ரேஷ்மா குமாரி, பிரேமா, ராஜ்குமார், சுபாஷ், யோகேஷ் ஆகிய 8 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் மே மாதம் அமெரிக்காவில் உள்ள நாசா விண் வெளி ஆராய்ச்சி மையத்துக்கு கல்விச் சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 9-ம் வகுப்பு மாணவி டி.ராமலட்சுமி, டெல்லியில் நடந்த குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்றார். நேற்று நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு பாராட்டு சான்றிதழ்களை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் வழங்கினார்.

‘இளம் சுற்றுச்சூழல் விஞ்ஞானி’

மேலும் ஐஐடியில் நடந்த அறிவியல் கண்காட்சியில், மாணவர்கள் பி.அரவிந்த், எஸ்.மனோஜ்குமார், பி.எஸ்.பிரவீன்குமார் ஆகியோர் உப்புநீரை வீட்டுக்கு பயன்படுத்தும் நல்ல நீராக மாற்றும் திட்டத்தை வடிவமைத்ததற்காக, ‘இளம் சுற்றுச்சூழல் விஞ்ஞானி’ விருது பெற்றிருந்தனர். அவர்களுக்கும் ஆணையர் கார்த்திகேயன் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையர் (கல்வி) மகேஸ்வரி ரவிக்குமார், மாநகராட்சி கல்வி அலுவலர் டி.சுப்பிரமணியன், சென்னை கிழக்கு ரோட்டரி சங்க நிர்வாகி கள் பி.எஸ்.புருஷோத்தம், மகேஷ் பட்டாபிராமன் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x