Published : 11 Feb 2018 09:11 AM
Last Updated : 11 Feb 2018 09:11 AM

திருவாரூர் ஓஎன்ஜிசி எண்ணெய் துரப்பண பணிக்கு எதிர்ப்பு: பேராசிரியர் ஜெயராமன் உட்பட 180 பேர் கைது

திருவாரூர் அருகே கடம்பங்குடி யில் ஓஎன்ஜிசி எண்ணெய்க் கிணறு அமைக்கும் பணிகளைக் கண்டித்து பிரச்சாரம் செய்த மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்புத் தலைவர் போராசிரியர் ஜெயராமன் உட்பட 180 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடம்பங்குடியில் ஓஎன்ஜிசி எண்ணெய்க் கிணறு அமைப்பதற்கான தளவாடப் பொருட்கள் நேற்று முன்தினம் 9 லாரிகளில் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டன.

இப்பணிக்கு எதிர்ப்பு வரக்கூடும் எனக் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் அதிகாரம் அமைப்பின் சண்முகசுந்தரம், மீத்தேன் எதிர்ப்புக் கூட்டமைப்பு நிர்வாகி சிவக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிரமுகர் சுந்தரபாண்டி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை நேற்று முன்தினம் இரவே திருவாரூர் குற்றவியல் நீதிபதி விடுதலை செய் தார்.

இந்நிலையில், 2-வது நாளாக நேற்று காலை 8.30 மணி அளவில் ஓஎன்ஜிசி எண்ணெய் துரப்பணப் பணிகளை எதிர்த்து, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்புத் தலைவர் பேராசிரியர் ஜெயராமன் கடம்பங்குடி பகுதி மக்களிடம் பிரச்சாரம் செய்தார். அப்போது, பேராசிரியர் ஜெயராமன் உட்பட 10 பேரை போலீஸார் கைது செய்து லெட்சுமாங்குடி காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

மக்கள் அதிகாரம் அமைப்பினர்

தொடர்ந்து, மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த சண்முகசுந்தரம் தலைமையில் பெண்கள், மாணவர்கள் உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் தென்பாதி கிராமத்தில் இருந்து ஊர்வலமாகச் சென்று கடம்பங்குடியில் உள்ள ஓஎன்ஜிசி எண்ணெய் கிணற்றை முற்றுகையிட்டனர். இந்தப் போராட்டம் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.

பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த சண்முகசுந்தரம், காத்தமுத்து, மோகன், சூரியா, ஆசாத் புரட்சிகர இளை ஞர் முன்னணியைச் சேர்ந்த பாண்டியன் மற்றும் 80 பெண்கள், பள்ளி மாணவர்கள் 22 பேர் உட்பட 170 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ஓஎன்ஜிசி துரப்பணப் பணிகளை தங்கள் பகுதியில் செயல்படுத்தக் கூடாது. இதனால் குடிநீர் ஆதாரம் பாதித்து வருவதால் இத்திட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என கைது செய்யப்பட்டுள்ள பொதுமக்கள் தெரிவித்தனர்.

கெயில் குழாய் பதிப்பு

இதனிடையே, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள திருமக்கோட்டை அனல் மின்நிலையத்துக்கு கெயில் நிறுவனத்தின் மூலம் குழாய் பதிக்கும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் 2-வது நாளாக பணிகள் நேற்று நடைபெற்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x