Published : 11 Feb 2018 08:42 AM
Last Updated : 11 Feb 2018 08:42 AM

துணை கண்டத்திலேயே ஊழல் நிறைந்தது தமிழக அரசுதான்: எம்எல்ஏ டிடிவி. தினகரன் கடும் குற்றச்சாட்டு

இந்திய துணைக் கண்டத்திலேயே ஊழல் நிறைந்தது தமிழக அரசுதான் என்று எம்எல்ஏ டிடிவி.தினகரன் தெரிவித்தார்.

தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் அருகே நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

டெல்டா மாவட்டங்களின் விவசாயத்தை பாதிக்கும் விதமாக ஓஎன்ஜிசி மூலம் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டங்களால் வருங்காலத்தில் விவசாயமே இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

கதிராமங்கலம், நெடுவாசல், மன்னார்குடி போன்ற இடங்களில் எல்லாம் விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை, விவசாயிகளை பாதிக்கிற திட்டங்களை தற்போது அனுமதித்து வருகின்றனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்த வரை இந்த திட்டங்களை அவர் அனுமதிக்க வில்லை.

தமிழகத்தில் நிதிநிலை சரியில்லை என்கின்றனர், ஆனால் எம்எல்ஏக்களுக்கு அவர்கள் கேட்காமலேயே சம்பளத்தை ரூ.50 ஆயிரம் உயர்த்தி ரூ.1.05 லட்சமாக்கி உள்ளனர். ஜெயலலிதாவின் ஆட்சியைப் பாதுகாக்க வேண்டும் எனப் போராடிய 18 எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்துள்ளனர். எந்த நேரமும் இதுதொடர்பான நீதிமன்ற தீர்ப்பு வரலாம். அப்போது இந்த ஆட்சி அகற்றப்படும்.

இந்திய துணைக் கண்டத்திலேயே ஊழலுக்கு பெயர் போன அரசாக தமிழக அரசு திகழ்கிறது. வருங்காலத்தில் இந்த அரசாங்கம் பதவி நீக்கம் செய்யப்பட்டு, பல வழக்குகளில் நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டி வரும் என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியபோது, “ஆர்.கே. நகர் தொகுதியில் ஜெயலலிதாவால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தொடங்கப்பட்ட பல பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. அத்தொகுதியில் நான் எம்எல்ஏவாக இருப்பதால் இதுபோன்று நடக்கிறது.

தர்மயுத்தம் என்பது ஒரு டுபாக்கூர் யுத்தம். பதவி பெறுவதற்காகவே அது நடந்தது. குடும்ப ஆட்சி எனப் பேசும் ஓ.பன்னீர்செல்வத்தின் உறவினர்களே தற்போது பல பதவியில் உள்ளனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x