Published : 11 Feb 2018 07:26 AM
Last Updated : 11 Feb 2018 07:26 AM

‘எய்ம்ஸ்’ இடத்தை விரைந்து தேர்வு செய்ய வேண்டும்: தமிழக முதல்வருக்கு மத்திய அமைச்சர் வலியுறுத்தல்

எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கான இடத்தை தமிழக அரசு விரைந்து தேர்வு செய்ய வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சவுபே வலியுறுத்தினார்.

கோவையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: இந்தியாவில் புதிதாக 20 எய்ம்ஸ் மருத்துவமனைகளை அமைப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவற்றில் 6 மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றன.

2020 மார்ச் மாதத்துக்குள் புதிதாக 6 மருத்துவமனைகளும், 2021-ம் ஆண்டுக்குள் மேலும் இரண்டு, 2022-ம் ஆண்டுக்குள் கூடுதலாக 5 மருத்துவமனைகள் அமைக்கப்படும். காஷ்மீரில் 2024-ம் ஆண்டுக்குள் ஒரு மருத்துவமனை அமைக்கப்படும்.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கான இடத்தை விரைந்து கண்டறியுமாறு முதல்வர் பழனிசாமியை சமீபத்தில் கேட்டுக் கொண்டேன்.

கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் சுகாதாரத்துறைக்கு என கூடுதலாக 11.5 சதவீத நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏழைகளுக்கு கூடுதலாக சுகாதார வசதிகளை ஏற்படுத்தித் தர முடியும். இதேபோன்று தேசிய சுகாதார திட்டத்துக்கு என கூடுதலாக 14 சதவீத நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், ரூ.1,200 கோடி ஆரம்ப சுகாதார சேவைக்கு என ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் குழந்தை இறப்பு மற்றும் பிரசவத்தின்போது பெண்கள் இறப்பு குறைந்துள்ளது. மருத்துவத் துறையில் தமிழகம் சிறப்பாக உள்ளதையே இது காட்டுகிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x