Published : 11 Feb 2018 07:23 AM
Last Updated : 11 Feb 2018 07:23 AM

பிப்.13 முதல் தமிழகம் முழுவதும் இணையவழியில் மட்டுமே பத்திரப்பதிவு: 10 நிமிடத்தில் வேலை முடியும்

தமிழகத்தில் வரும் 13-ம் தேதி முதல் முழுமையாக இணைய வழியில் மட்டுமே பத்திரப் பதிவு செய்யப்படும் என்று மதுரை மண்டல பதிவுத் துறை துணைத் தலைவர் சிவக்குமார் தெரிவித்தார்.

இணைய வழியில் மட்டுமே பத்திரப்பதிவு மேற்கொள்ள புதிய மென்பொருள் பயன்படுத்தப்பட உள்ளது. இதற்காக மாவட்ட பதிவுத் துறை பதிவாளர்கள், சார்- பதிவாளர்கள், அலுவலகப் பணியாளர்கள், ஆவண எழுத்தர்கள், பொதுமக்கள், வழக்கறிஞர்கள், கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினர் ஆகியோருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

அலுவலர்களுக்கு பயிற்சி

மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 102 பத்திரப்பதிவு அலுவலகங்கள் உள்ளன. இங்கு பணிபுரியும் அனைவருக்கும் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் கடந்த 6, 7 ஆகிய தேதிகளில் முதற்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.

இறுதிகட்டப் பயிற்சி நேற்று நடந்தது. இதில் மதுரை மண்டல பதிவுத்துறை துணைத் தலைவர் சு.சிவக்குமார் பேசியதாவது:

பத்திரப்பதிவை விரைவுபடுத்தவும் நீண்ட நேரம் மக்கள் காத்திருப்பதை தவிர்க்கவும் 2.0 மென்பொருள் அறிமுகமாக உள்ளது. இணைய வழியில் மட்டுமே பத்திரப்பதிவு செய்யும் புதிய திட்டத்தை முதல்வர் நாளை (பிப்.12) தொடக்கி வைக்க உள்ளார். இதையடுத்து பிப்.13 முதல் முழுமையாக (100 சதவீதம்) இணைய வழியில் மட்டுமே பத்திரங்கள் பதிவு செய்யப்படும்.

இணையவழி மூலம் ஆவணங்கள் கிடைத்ததும் இளநிலை உதவியாளர் ஆய்வு செய்து சார்-பதிவாளருக்கு அனுப்புவார். அவர் பரிசீலித்து ஆவணத்தை பதிவு செய்யலாம் என உத்தரவு தருவார்.

இதன் பிறகு எந்த நாள், என்ன நேரத்தில் பதிவு செய்யலாம் என்பதை சொத்து வாங்குபவரே முடிவு செய்யலாம். குறிப்பிட்ட நேரத்தில் பதிவு அலுவலகத்துக்கு நேரில் வந்தால் 10 நிமிடங்களில் ஆவணங்களை பதிவு செய்யலாம். அன்றே பதிவான ஆவணங்களையும் பெற்றுச் செல்லலாம்.

செல்போனில் குறுந்தகவல்

மேலும் ஆவணங்கள் உரிமம் மாற்றத்தின்போது, சொத்தின் முந்தைய உரிமையாளருக்கு செல்போனில் குறுந்தகவல் செல்லும். சொத்து மதிப்பீடு, கட்டிட மதிப்பீடு வேறுபாடு இருந்தால், அது குறித்தும் குறுந்தகவல் வரும். இதுவரை மாவட்ட அளவில் சேமிக்கப்படும் பத்திரப்பதிவு ஆவண தகவல்கள், இனி சென்னையில் உள்ள மத்திய தொகுப்பிலும் சேமிக்கப்படும். இதனால் ஆவணங்கள் பாதுகாப்பு மேலும் உறுதிபடுத்தப்படும். இணைய வழியிலேயே பட்டா மாறுதல் மனுக்களை வருவாய்த் துறைக்கு அனுப்புவதுடன், குறுஞ்செய்தி, ஒப்புகை சீட்டும் அளிக்கப்படும்.

இணையவழி கட்டணமில்லா வில்லங்கச் சான்றிதழ் பெறும் வசதி 30 ஆண்டுகளில் இருந்து 42 ஆண்டுகளாக உயரும். ஒரு மணி நேரத்தில் 8 ஆவணங்கள் பதிவு செய்வது என பல வசதிகள் புதிய மென்பொருளில் உள்ளது. மூல ஆவணங்களை ஸ்கேன் செய்து இணையத்திலேயே அனுப்ப வேண்டும். யார் துணையும் இல்லாமல் மக்களே நேரடியாக ஆவணங்களை அனுப்பி பதிவு செய்யலாம். ஆனால், அதிக பணத்தில் சொத்து வாங்கும்போது ஆவணங்களில் பிழை இருந்துவிடுமோ என்ற பயம் காரணமாக சுயமாக யாரும் பதிவு செய்வதில்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x