Published : 11 Feb 2018 07:16 AM
Last Updated : 11 Feb 2018 07:16 AM

தமிழக சட்டப்பேரவையில் ஜெ. படம் நாளை திறப்பு: பேரவைத் தலைவர் தனபால் திறந்து வைக்கிறார்

சட்டப்பேரவை அரங்கில் ஜெயலலிதா படத்தை பேரவைத் தலைவர் பி.தனபால் நாளை திறந்துவைக்கிறார்.

தமிழக முதல்வராக 6 முறை பொறுப்பு வகித்த ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உடல்நலக்குறைவால் மறைந்தார். அவரது உருவப்படத்தை சட்டப்பேரவை அரங்கில் அமைக்க வேண்டும் என்று அக்கட்சி எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, ஜெயலலிதாவின் உருவப்படத்தை பேரவை அரங்கில் அமைக்க முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, பேரவை அரங்கில் ஜெயலலிதாவின் படம் நாளை (பிப்.12) காலை திறந்து வைக்கப்பட உள்ளது. இது தொடர்பாக பேரவைச் செயலாளர் க.பூபதி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப்படம், பிப்.12-ம் தேதி காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை மண்டபத்தில் திறந்துவைக்கப்படுகிறது. முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் நடக் கும் நிகழ்ச்சியில், ஜெயலலிதா படத்தை பேரவைத் தலைவர் பி.தனபால் திறந்துவைக்கிறார். இதற்கான அழைப்பிதழ் பேரவை உறுப்பினர்களுக்கு தனித்தனியே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’ என கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் புகைப்படம், ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் அமர்ந்திருக்கும் பகுதியில் முதல்வர் இருக்கைக்கு பின்புறம், முதல் மற்றும் 2-வது பிளாக் இடையில் உள்ள தூணில் பொருத்தப்பட உள்ளது. ஏற்கெனவே உள்ள புகைப்படங்களைப் போல ஜெயலலிதா படமும் 7 அடி உயரம் 5 அடி அகலம் கொண்டதாகவும், முழு உருவப்படமாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை கவின் கலைக்கல்லூரி தயாரித்துள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

சட்டப்பேரவை அரங்கில் ஜெயலலிதாவின் படத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைப்பார் என்றும் அதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றும் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது பிரதமர் மோடி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோர் இல்லாமல் பேரவைத் தலைவரே ஜெயலலிதா படத்தை திறந்துவைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

10 தலைவர்களின் படங்கள்

தற்போது பேரவை அரங்கில், திருவள்ளுவர், மகாத்மா காந்தி, ராஜாஜி, காயிதே மில்லத், அம்பேத்கர், முத்துராமலிங்கத் தேவர், பெரியார், முன்னாள் முதல்வர்கள் காமராஜர், அண்ணாதுரை, எம்ஜிஆர் ஆகிய 10 பேரின் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள காந்தியின் படத்தை, 1948-ல் அப்போதைய கவர்னர் ஜெனரல் ராஜாஜி திறந்து வைத்தார். அதன்பின், ராஜாஜியின் படத்தை 1948-ல் பிரதமராக இருந்த ஜவகர்லால் நேருவும், திருவள்ளுவரின் படத்தை 1964-ல், குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜாகீர் உசேனும் திறந்துவைத்தனர். ராஜாஜிக்கு மட்டுமே அவர் உயிருடன் இருந்தபோதே பேரவையில் படம் திறந்துவைக்கப்பட்டது.

மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் படத்தை 1969-ல் பிரதமராக இருந்த இந்திரா காந்தியும், காமராஜர் படத்தை 1977-ல் குடியரசுத் தலைவராக இருந்த நீலம் சஞ்சீவ ரெட்டியும், பெரியார், அம்பேத்கர், முத்துராமலிங்கத் தேவர், காயிதே மில்லத் ஆகியோர் படங்களை 1980-ல் கேரள ஆளுநராக இருந்த ஜோதி வெங்கடாச்சலமும் திறந்து வைத்தனர்.

அதைத் தொடர்ந்து மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் படத்தை கடந்த 1992-ம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா திறந்துவைத்தார். தற்போது ஜெயலலிதா படத்தை பேரவைத் தலைவர் பி.தனபால் திறக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x