Last Updated : 11 Feb, 2018 07:11 AM

 

Published : 11 Feb 2018 07:11 AM
Last Updated : 11 Feb 2018 07:11 AM

தீபா வீட்டில் வருமானவரி சோதனைக்கு வந்திருப்பதாக கூறி போலீஸ் படையை கிடுகிடுக்க வைத்த மர்ம இளைஞர்: சுவர் ஏறி குதித்து தப்பியவரை தேடும் தனிப்படை; சினிமாவை மிஞ்சும் பரபரப்பு

ஜெயலிதாவின் அண்ணன் மகள் தீபா வீட்டில் வருமானவரி சோதனை நடத்தப்போவதாக கூறிக்கொண்டு அதிகாலையில் அவரது வீட்டுக்கு வந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 4 மணிநேரத்துக்குப் பிறகு, தீபா பேரவையினர், போலீஸார் கண் எதிரிலேயே சுவரை தாண்டிக் குதித்து அவர் ஓட்டம் பிடித்தார். சினிமாவை மிஞ்சும் வகையில் தனி ஆளாக வந்து பரபரப்பை ஏற்படுத்திய அந்த நபரை தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா. ‘எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை’ என்ற அமைப்பை நடத்தி வருகிறார். சென்னை தி.நகர் சிவஞானம் தெரு வில் இவரது வீடு உள்ளது.

இந்நிலையில், ‘வருமானவரித் துறை புலனாய்வு அதிகாரி’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டு இளைஞர் ஒருவர் நேற்று அதிகாலை சுமார் 5.30 மணி அளவில் தீபாவின் வீட்டுக்கு வந்தார். தீபாவின் வீட்டில் சோதனை நடத்த வந்திருப்பதாக நுழைவுவாயிலில் இருந்த காவலாளிகளிடம் கூறினார். சில நிமிடங்களில் தீபா கணவர் மாதவன் வெளியே வந்தார். கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த அடையாள அட்டையைக் காட்டியபடி அவரை நெருங்கிச் சென்ற அந்த இளைஞர், ‘‘என் பெயர் மிதேஷ்குமார். வருமான வரி புலனாய்வு பிரிவு உதவி ஆணையர். உங்கள் வீட்டில் சோதனை நடத்த வந்திருக்கிறேன். என்னுடன் இணைந்து சோதனை நடத்த மேலும் 10 அதிகாரிகள் காலை 10 மணிக்கு வருவார்கள். யாரும் இங்கிருந்து வெளியே செல்லக்கூடாது’’ என்று அதிகார தொனியில் ஆங்கிலத்தில் சரளமாக கூறினார்.

இதையடுத்து, தீபா பேரவையின் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் சாமி சின்னபிள்ளையை மாதவன் உடனே தொடர்பு கொண்டு இதுபற்றி கூறினார். சிறிது நேரத்தில் அவர் அங்கு வந்து சேர்ந்தார். தலைமை நிலைய செயலாளரான வழக்கறிஞர் தொண்டன் சுப்பிரமணியும் அங்கு வந்தார்.

இதற்கிடையில், வீட்டின் பணியாளர்கள், காவலாளிகளிடம் பேசிக்கொண்டிருந்த அந்த இளைஞர், ‘‘வீட்டில் யாரும் இனிமேல் போன் பேசக்கூடாது. வீட்டில் சந்தேகத்துக்கிடமான அனைத்து அறைகளையும் நான் திறந்துபார்க்க அனுமதிக்க வேண்டும். சோதனைக்கு குறுக்கீடு செய்தால், உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்’’ என்று மிரட்டியுள்ளார்.

இதற்கிடையில், அங்கு வந்துசேர்ந்த வழக்கறிஞர்கள் சாமி சின்னபிள்ளை, தொண்டன் சுப்பிரமணி ஆகியோர் தயங்கியபடியே அவரிடம் பேச்சு கொடுத்தனர். அதிகாரிகள் வருகை, சோதனைக்கான சம்மன் குறித்து கேள்வி எழுப்பினர். அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து, உடனடியாக மாம்பலம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். உதவி காவல் ஆணையர் செல்வம் தலைமையில், ஆய்வாளர் சேகர் மற்றும் 25-க்கும் மேற்பட்ட போலீஸார் விரைந்து வந்தனர்.

அவர்கள் அந்த நபர் வைத்திருந்த அடையாள அட்டை மற்றும் சோதனையிடுவதற்கான சம்மனைப் பார்த்தனர். வருமானவரித் துறையின் முத்திரை யோடு கூடிய அந்த அடையாள அட்டையில், ‘மிதேஷ்குமார். வருமானவரி புலனாய்வு பிரிவு உதவி ஆணையர்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. சோதனைக்கான சம்மனில் முனிசிபல் நீதிமன்ற நீதிபதி, வருமானவரித் துறை ஆணையரின் கையெழுத்தும் இருந்தன. இதனால் குழப்பம் அடைந்த போலீஸார் அவற்றை புகைப்படம் எடுத்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்பினர். அவரைப் பற்றி வேறு ஏதும் ஊகிக்க முடியாமல், உயர் அதிகாரிகளின் உத்தரவுக்காக அங்கேயே காத்திருந்தனர்.

அதற்குள், நேரம் ஆகஆக ரெய்டு பரபரப்பு அதிகரித்தது. தகவல் கிடைத்து செய்தியாளர்களும் குவியத் தொடங்கினர். அப்போது காலை மணி 9.40. குறுக்கும் நெடுக்குமாக சென்றுகொண்டிருந்த அந்த நபர், திடீரென வீட்டின் வலது பக்க சுவர் அருகே நெருங்கிச் சென்றார். அங்கு வரிசை யாக நாற்காலிகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. சோதனையிடுவது போல நாற்காலிகள் மீது ஏறினார். அங்கு திரண்டிருந்த தீபா பேரவை நிர்வாகிகளும், போலீஸாரும், மற்றவர்களும் அவர் என்ன செய்யப்போகிறார் என்று ஒருவித குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, நாற்காலி யில் இருந்து சுவர் மீது ஏறிய அவர், திடீரென அந்தப் பக்கம் தாண்டிக் குதித்து ஓட்டம் பிடித்தார்.

போலீஸார் உட்பட அங்கு இருந்தவர்கள் அனைவரும் செய்வது அறி யாது திகைத்து நின்றனர். சில போலீ ஸார் அதேபோல நாற்காலிகளில் ஏறி சுவரைத் தாண்டிக் குதித்து அவரை துரத்திச் சென்றனர். சில போலீஸார் வேறு பாதையில் சென்று அவரைப் பிடிக்கும் முயற்சியில் இறங்கினர். கையில் கேமராக்களுடன் செய்தியாளர்கள் ஒரு பக்கம் துரத்திக்கொண்டு ஓடினர்.

அதற்குள், மற்றொரு கட்டிடத்தின் வழியாக புகுந்து, அங்கிருந்த சுவரை யும் தாண்டி வெங்கட்நாராயணா சாலைக்குச் சென்ற நபர், ஆட்டோ வில் ஏறி தப்பினார். போலீஸாரும் விடாமல் துரத்திச் சென்று, தெரு தெருவாக தேடியும் அவரைப் பிடிக்க முடியவில்லை. சினிமாவை மிஞ்சும் வகையில், வருமானவரி அதிகாரி என்று கூறிக்கொண்டு, போலீஸ் படையை ஏமாற்றிவிட்டு, தனி ஆள் ஒருவர் தப்பி ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக மாம்பலம் காவல் நிலையத்தில் மாதவன் புகார் அளித்தார். ‘‘மோசடி நபர் என்ன உள்நோக்கத்துடன் வந்தார்?அவரை யாரேனும் குற்றச்செயலுக்காக அனுப்பினரா? என்று விசாரிக்க வேண்டும்’’ என்று அதில் கூறியுள்ளார்.

அந்த நபரைப் பற்றிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. அவர் கொண்டுவந்த அடையாள அட்டை, சம்மன் ஆகியவை போலியானவை. வருமானவரி அதிகாரி என்று மோசடி செய்துள்ளார் என்பது மாம்பலம் போலீ ஸார் நடத்திய முதல்கட்ட விசாரணை யில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. ‘மிதேஷ்குமார்’ என்பதுதான் உண்மை யான பெயரா என்று விசாரணை நடக்கிறது. அவரைப் பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

உடன் வந்த 3 பேர் எங்கே?

வருமானவரி அதிகாரி என்று கூறிய இளைஞருடன் மேலும் 3 பேர் தீபா வீட்டுக்கு வந்துள்ளனர். அவர்கள் வெளியிலேயே காத்திருந்தனர். இளைஞர் தப்பியதும், அவர்கள் தாங்கள் வந்த காரில் ஏறி தப்பிவிட்டனர். அந்த கார் எண் போலீஸிடம் சிக்கியுள்ளது. அதன் அடிப்படையிலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

கண்காணிப்பு கேமரா

தீபா வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் அனைத்தும் சுவரை நோக்கி திரும்பி இருந்ததால், அதன்மூலம் எந்த துப்பும் கிடைக்கவில்லை. அவற்றை இவ்வாறு திருப்பியது யார் என்று விசாரணை நடக்கிறது. அதே நேரம், பக்கத்து வீட்டில் உள்ள கேமராவில் அனைத்தும் பதிவாகியுள்ளது. அதன் அடிப்படையில் விசாரணை நடக்கிறது. நேற்று வீட்டில் தீபா இல்லை. அவர் ஆயுர்வேத சிகிச்சைக்காக சென்றிருப்பதாக மாதவன் கூறினார்.

பாதுகாப்புக்கு வந்தார்களா?

பொதுவாக, வருமானவரித் துறையினர் சோதனைக்குச் செல்லும்போது, பாதுகாப்பு தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் வாய்மொழியாக கேட்பது வழக்கம். சில நேரங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களையும் அழைத்துச் செல்வது உண்டு என்று வருமானவரித் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

நேற்றைய சம்பவத்துக்கு முன்பும், இதுபோல ஒருவர் தி.நகர் உதவி ஆணையர் செல்வத்தை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். ‘‘நாங்கள் டெல்லியில் இருந்து வந்திருக்கிறோம். தீபா வீட்டில் சோதனை நடத்த போலீஸ் பாதுகாப்பு வேண்டும்’’ என்று கேட்டதாக கூறப்படுகிறது. இதனால், போலீஸாரும் அவர்களது பாதுகாப்புக்காக வந்து தீபா வீட்டின் வெளியில் காத்திருந்ததாக தகவல் வெளியானது. ஆனால், இதுபற்றி போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘யாரும் எங்களை பாதுகாப்புக்காக அழைக்கவில்லை. நாங்களும் செல்லவில்லை. மாதவன் கொடுத்த தகவலின்பேரிலேயே தீபாவின் வீட்டுக்கு சென்றோம்’’ என்றனர். தீபா வீட்டில் இருந்து தப்பிய இளைஞர், உதவி ஆணையர் செல்வத்தை தள்ளிவிட்டு ஓடியதாகவும் கூறப்பட்டது. இது உண்மையா என்று தெரியவில்லை. அந்த இளைஞர் வேறு எங்கும் தப்பிவிடாமல் இருக்க, அவரது புகைப்படம் ரயில், விமான நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x