Published : 05 Feb 2018 07:32 PM
Last Updated : 05 Feb 2018 07:32 PM

ஆண்டாள் குறித்த வைரமுத்து கட்டுரைக்கு தடை கோரும் வழக்கு: தமிழ் தெரிந்த நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற உத்தரவு

தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் வைரமுத்து எழுதிய கட்டுரையைத் தடை செய்யக் கோரி வழக்கை தமிழ் தெரிந்த நீதிபதிகள் கொண்ட அமர்வில் பட்டியலிடுவதாக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

வழக்கறிஞர்கள் மொய்தீன் இப்ராகிம், ஜி.பிரபு மற்றும் பெயின்டிங் ஒப்பந்ததாரர் விக்டர் மற்றும் தமிழ் இலக்கியவாதியும் மென்பொருள் பொறியாளருமான கே.வி.எஸ். கண்ணன் ஆகியோர் கூட்டாக இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.

ஒற்றுமையையே அனைத்து மதங்களும் போதிப்பதாகக் கூறி, பகவத் கீதை, குரான் மற்றும் பைபிளில் இருந்து வரிகளும் மனுவில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. ஆனால், கோடிக்கணக்கான மக்கள் வழிபடும் பெண் தெய்வமான ஆண்டாளை வேண்டுமென்றே, அவதூறான வகையில் புனிதத்தன்மையை கெடுக்கும் நோக்கில் வைரமுத்து கட்டுரை வெளியிட்டிருப்பதாகவும் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் காவல் நிலையத்தில் கண்ணன் சார்பில் புகார் அளிக்கப்பட்டு, பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், சர்ச்சைக்குரிய கட்டுரை இணையதளம் மற்றும் செய்தித்தாள் வடிவில் எளிதாகக் கிடைப்பதாகவும் அதைத் தடை செய்ய தமிழக உள்துறைச் செயலருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடப்பட்டிருந்தது.

வைரமுத்துவின் கட்டுரை அவதூறானது என்ற நிலையில், அதற்கு எதிர்கருத்து கூறிய ஹெச்.ராஜா மாற்று மதக் கடவுள் குறித்து அவதூறு கூறியதுடன், தொடர்ந்து வைரமுத்துவை விமர்சிப்பதால் அவரையும் வழக்கில் பதில் மனுதாரராகச் சேர்க்கவும் மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ''ஆண்டாள் குறித்த கட்டுரையால் சமூக வலைதளங்களில் தவறான கருத்துகள் பரப்பட்டு வருகின்றன. ஆண்டாள் குறித்த தவறான புகைப்படங்களும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பரப்பட்டு வருகின்றது . இது மத உணர்வுகளை புணபடுத்தும் வகையில் உள்ளது. எனவே அமைதிக்கான பேச்சு வார்த்தை குழுவை அமைத்து இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும'' என வாதாடினார்.

இதைக் கேட்ட தலைமை நீதிபதி, ''தனக்கு தமிழ் தெரியாது. எனவே, ஆண்டாள் குறித்த கட்டுரையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தர முடியுமா?'' என்றார். அதற்கு மனுதரார் தரபில் மொழிபெயர்ப்பு செய்வது கடினமானது என தெரிவித்தார். தலைமை நீதிபதி அமர்வில் இருந்த மற்றொரு நீதிபதி அப்துல்குத்தூஸ் தனக்கு தமிழ் தெரிந்தாலும் ஆண்டாள் குறித்து முழுமையாக் தெரியாது என்றார்.

இதைக் கேட்ட தலைமை நீதிபதி மதரீதியான கருத்துகள் மிக உணர்வுப் பூர்வமானவை. அதில் பிரச்சினை ஏற்படும்போது அவை தடுக்கப்பட வேண்டும் என கூறி வழக்கை தமிழ் தெரிந்த வேறு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x