Published : 05 Feb 2018 06:49 PM
Last Updated : 05 Feb 2018 06:49 PM

மீனாட்சி அம்மன் கோயிலில் கடைகளால் தீப்பிடித்தது என்றால் அனைத்தும் அகற்றப்படும்: ஆய்வுக்கு பின் ஓபிஎஸ் பேட்டி

மீனாட்சி அம்மன் கோயில்  தீ விபத்துக்கு கடைகள்தான் காரணம் என்றால் அனைத்துக் கடைகளும் அகற்றப்படும் என்று துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்தார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தீயணைப்புத் துறை துரிதமாக செயல்பட்டதால் தீ பரவாமல் தடுக்கப்பட்டதாக கூறினார் .

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார்

''மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்ட பாதிப்பு குறித்து முழுமையாக சேத மதிப்பீடு கணக்கிடப்பட்டு வருகிறது. சேத மதிப்பு மதிப்பிடப்பட்டு வந்தவுடன் ஆறுமாத காலத்திற்குள் முன்பிருந்த நிலைக்கு ஆகம விதிப்படி, முன்பிருந்த பாரம்பரிய (ஹெரிடேஜ்) விதிகளின் படி முழுமையாக பாதிக்கப்பட்ட 7,000 சதுர அடி சீரமைக்கப்பட்டு முன்பிருந்த நிலைக்கு கொண்டு வரப்படும். சேத மதிப்பை, தோராயமாக கணக்கிட்டு சொல்ல இயலாது

இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு ஆலயப் பாதுகாப்புக் குழு அமைக்கப்பட்டு அது பல்வேறு கோணங்களில் பரிசீலனை செய்து ஆய்வு செய்து இது மாதிரியான அசம்பாவிதங்கள் நடைபெறாமல் திருக்கோயில்கள் பாதுகாக்கப்படும் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கடைகளினால் திருக்கோயிலுக்கு பாதிப்பு ஏற்படுகின்ற சூழல் இந்தத் தீ விபத்து நடைபெற்றது. அதை அரசு தீவிரமாக பரிசீலித்து கவனமுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இனிமேல் இதுமாதிரி தீ விபத்துகள் ஆலய திருக்கோயில்களில் நடைபெறாத வண்ணம் உரிய வகையிலான பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து பக்தர்களுக்கு பாதுகாப்பு அளித்து நம்முடைய பாரம்பரிய சின்னமாக விளங்கக் கூடிய திருக்கோயில் முழுமையாக பாதுகாக்கப்படும் .

கடைகளால் இந்த விபத்து ஏற்பட்டது என்று தெரியவந்தால் கடைகள் முற்றிலுமாக அகற்றப்படும். கோயில் நிர்வாகத்தின் மீது பழி போடுவது இந்த நேரத்தில் சரியாக இருக்காது

தனிப்பட்ட பாதுகாப்புக் குழு என்று சொல்லும் அவர்களிடமோ ,தனிப்பட்ட துறைகளிடமோ ஆலயங்கள் ஒப்படைப்பது சரியாக வராது. அரசுதான் கோயிலினுடைய முழு பாதுகாப்பை உறுதி செய்கின்ற பொறுப்பு இருக்கிறது. தனியாக தீயணைப்பு நிலையம் உலக பிரசித்தி பெற்ற கோயில்களில் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்படும் .

இந்தத் தீ விபத்து சிறந்த படிப்பினையைக் கொடுத்துள்ளது .இதனை முன்னுதாரணமாகக் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்களில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க இடையூறு இருந்தால் அதனை முழுமையாக அகற்றி நம்முடைய பாரம்பரிய சின்னங்கள் முழுமையாக பாதுக்காக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சிபிஐ விசாரணை வேண்டும் என ஹெச் ராஜா கேட்டுள்ளது தேவையற்ற ஒன்று என நான் கருதுகிறேன். முழு விசாரணை முடிவு தெரிந்த பிறகு அரசின் மூலமாக கூடிய விரைவில் வெளியிடப்படும். தீ விபத்தினால் ஆட்சிக்கு ஆபத்து என்ற ஜோதிடர்களின் கருத்து குறித்து ஜோதிடம் எனக்கு தெரியாது.

பொருட்கள் உள்ளே கொண்டு செல்லப்படும் போது நடத்தப்படும் சோதனை வெளியே கொண்டு வரும் போது சோதனை செய்யப்படுவதில்லை .குறிப்பாக பேட்டரி பொருட்கள். அது மாதிரியான குறைபாடுகள் இருப்பது உள்ளே கடைகளுக்கு வாடகை விடுவதன் காரணம் தான் .ஆகவே உள்ளே மற்றும் வெளியே செல்கின்ற பொருட்களுக்கு சோதனை செய்யப்படும்'' என்றார் ஓபிஎஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x