Published : 05 Feb 2018 05:31 PM
Last Updated : 05 Feb 2018 05:31 PM

ஜெ.தீபா, ராஜா ரூ.1.12 கோடி மோசடி: காவல் ஆணையரிடம் கட்சிப் பிரமுகர் புகார்

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, அவரது கார் ஓட்டுநர் ஏ.வி.ராஜா இருவரும் தன்னிடம் ரூ.1.12 கோடி பெற்று திரும்பத் தராமல் மிரட்டுகிறார்கள் என எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையைச் சார்ந்த ஒருவர் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் வெளிச்சத்துக்கு வந்த ஜெ.தீபா கடந்த ஓராண்டில் தனது அதிகம் சர்ச்சையில் சிக்கி வருகிறார். கணவருடன் மோதல், ராஜாவுடன் மோதல், தீபக்குடன் மோதல், போயஸ் கார்டனில் பிரச்சினை, கட்சி நிர்வாகிகள் மீது புகார், ராஜா மீது புகார் என தீபா சர்ச்சைக்குரியவராக இருக்கிறார்.

இரண்டு நாட்களுக்கு முன் காவல் ஆணையர் அலுவலகத்தில் தன்னைப் பற்றி வலைதளங்களில் தவறாக எழுதுகிறார்கள் என்று புகார் அளித்தார் தீபா. ஆனால் இரண்டு நாளில் அவர் மீதே வியாபாரியும், தீபா கட்சிப் பிரமுகருமான முட்டை வியாபாரி ஒருவர் மோசடி செய்ததாக புகார் அளித்துள்ளார்.

இன்று காலை சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த முட்டை மொத்த வியாபாரியான ராமச்சந்திரன், சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்துக்கு வந்தார். காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்தார்.

அவரது புகாரில் கூறியிருப்பதாவது:

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையில் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட செயலாளராக நான் பணியாற்றி வந்தேன். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரது அண்ணன் மகள் தீபாவை தலைவியாக ஏற்றுக் கொண்டு செயல்பட்டேன்.

அவரது கார் டிரைவர் ஏ.வி. ராஜா என்னைத் தொடர்புகொண்டு தீபா மிகவும் கஷ்டப்படுவதாகவும், அவசரக் கடனை உடனே திரும்ப செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதாகவும், தி.நகரில் உள்ள வீட்டில் மராமத்து வேலைகள் இருப்பதாகவும் கூறினார்.

இதற்காக ரூ.50 லட்சம் கடனாக வேண்டும் என்று தீபா கூறியதாகவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நான் தீபாவிடமும், ராஜாவிடமும் ரூ.50 லட்சம் கடனாக வழங்கினேன். இதன் பின்னர் பல்வேறு கால கட்டங்களில் பணப் பற்றாக்குறை ஏற்பட்டதாக தீபா என்னிடம் நேரிலும், தொலைபேசியிலும் கேட்டுக்கொண்டார். இதன் அடிப்படையில் ரூ.2 லட்சம், ரூ.1 லட்சம், ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம் என மொத்தம் ரூ.19 லட்சம் கொடுத்துள்ளேன்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீபாவின் கணவர் மாதவன் வீட்டில் இருந்த ரூ.50 லட்சத்தை திருடிச்சென்று விட்டதாக தீபாவும், ராஜாவும் அழுது புலம்பி கண்ணீர் வடித்தனர். மீண்டும் அவசிய செலவுக்காக ரூ.10 லட்சம் கேட்டனர். இந்த பணத்தையும் ராஜா முன்னிலையில் தீபாவிடம் கொடுத்தேன்.

அதுபோல தீபாவும், ராஜாவும் கட்சியினருக்கு பதவி வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கி உள்ளனர். வேணு என்பவரிடம் ரூ.2½ லட்சம், குடியரசு என்பவரிடம் ரூ.1 லட்சம், வெங்கடேஷ் என்பவரிடம் ரூ.2 லட்சம், கோவை சாமி என்பவரிடம் ரூ.50 ஆயிரம், சிவக்குமாரிடம் ரூ.30 ஆயிரம் என என்னிடம் கட்சியில் பதவி தருவதாகக் கூறி பணம் பெற்றுக் கொண்டனர்.

இதன்படி தீபாவும், அவரது கார் டிரைவர் ராஜாவும் ரூ.1 கோடியே 12 லட்சம் மோசடி செய்துள்ளனர். நான் உழைத்து சம்பாதித்த பணத்தையும், நண்பர்கள், உறவினர்களிடம் வாங்கி கொடுத்த பணத்தையும் பெற்றுக் கொண்டு என்னை மாவட்ட செயலாளர் ஆக்குகிறேன், மந்திரி ஆக்குகிறேன் என ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி விட்டனர்.

இந்த பணத்தை திருப்பிக் கேட்டபோது தீபாவும், மாதவனும் நேரிலும், ராஜாவின் மூலமாகவும் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். எனவே இருவர் மீதும் நடவடிக்கை எடுத்து எனது பணத்தை திரும்பப் பெற்றுத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த புகார் மனுவை மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு மாற்றி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x