Published : 05 Feb 2018 01:35 PM
Last Updated : 05 Feb 2018 01:35 PM

பக்கோடா விற்பது பற்றி மோடி கூறியதைத் திரிப்பதா?- ப.சிதம்பரத்திற்கு தமிழிசை கண்டனம்

வங்கிக் கடன் மூலம் ஒருவர் தெருவில் பக்கோடா விற்றால் கூட தினசரி ரூ.200 பெற முடியம் என்று மோடி கூறியதைத் திரித்துக் கூறி பக்கோடா விற்பவர்களை பிச்சைக்காரர்களுக்கு சமமாக ஒப்பிடுவதா? என ப.சிதம்பரத்திற்கு தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை இன்று வெளியிட்ட அறிக்கையில், ''20 ஆண்டுகளுக்கு மேலாக மத்திய அரசின் முக்கிய அமைச்சராகப் பணியாற்றிய ப.சிதம்பரம் தமிழ்நாட்டுக்கு செய்தது என்ன? அவரை நாடாளுமன்ற உறுப்பினராக அனுப்பிய சிவகங்கைக்கும் அதை ஒட்டிய ராமநாதபுரம் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு கொண்டு வந்த ஒரு உருப்படியான பெரிய திட்டத்தை சொல்ல முடியுமா?

அங்கே வங்கிகளையும், 'ஏடிஎம்' சென்டர்களையும் கொண்டுவந்ததை தவிர சிதம்பரம் வேறு என்ன செய்தார்? அகில இந்திய அளவில் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாக அவரது தொகுதிக்கு உட்பட்ட ராமநாதபுரத்தை இன்று அடையாளம் கண்ட மத்திய அரசு அதையும் முன்னேற்றுவதற்கு திட்டம் தீட்டியுள்ளது.

வேலையின்றி இருப்போர்க்கு உதவி கிடைக்கும் வங்கிக் கடன் மூலம் ஒருவர் தெருவில் பக்கோடா விற்றால் கூட தினசரி ரூ.200 பெற முடியம் என்று கூறியதைத் திரித்துக் கூறி பக்கோடா விற்பவர்களை பிச்சைக்காரர்களுக்கு சமமாக ஒப்பிட்ட செட்டிநாடு சீமான் கண்களுக்கு சுய வேலைவாய்ப்பு என்பது கேவலமாக தோன்றுவது ஏன்?

இந்நாட்டு வேலையில்லா பட்டதாரிகளை உடனே தன்மகனைப்போல் கோடீஸ்வரர்களாக மாற்றும் சிதம்பர ரகசியம் என்ன என்பதை மக்களுடன் பகிர்வாரா சிதம்பரம்? உலகின் மிகப் பெரிய அளவிலான மக்கள் உடல்நலம் பேணும் காப்பீட்டு திட்டத்தை 50 கோடி மக்களுக்கு எப்படி செயல்படுத்துவார்கள் எனக் கேட்கிறார் சிதம்பரம்.

அதற்கான நிதி ஆதாரம் எங்கே எனக் கேட்கும் சிதம்பரத்திற்கு நிதி ஆயூக் தலைவர் பதில் ஏற்கெனவே 2000 கோடி உள்ளது 2% செஸ்வரி மட்டும் போதுமே, நீங்கள் முடியாது என்று நினைத்ததை முடித்துக் காட்டுபவர் தான் மோடி.

ஜிஎஸ்டி முடியாது என்று விட்டுவிட்டீர்கள் அதனை செயல்படுத்தி காட்டியவர் மோடி. பணமதிப்பு குறைப்பு நடவடிக்கையை மன்மோகன் சிங் ஆட்சியில் யோசித்தோம் என்றார், அதனை நடத்திக் காட்டியவர் மோடி. தூய்மை இந்தியா திட்டத்தை கேலி பேசினீர்கள், இன்று அத்திட்டத்தில் 60 ஆண்டுகளாக ஆட்சியில் நடக்காத அதிசயம் 30 கோடி மக்களுக்கு கழிப்பறை கட்டப்பட்டுள்ளது.

2014-ம் ஆண்டிலிருந்து 30 கோடி இந்தியர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கி சாதனை படைத்த மோடி அரசு இன்று 60 கோடி இலக்கை நிர்ணயித்துள்ளது, 5 கோடி பெண்களுக்கு இலவச கேஸ் வெற்றிகரமாக வழங்கி இன்று 8 கோடி இலக்கை நிர்ணயித்துள்ளது. ஏற்கெனவே திட்டமிட்ட இலக்கை வெற்றிகரமாக செயல்படுத்திய மோடி அரசால் 50 கோடி இந்தியர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்க முடியாதா? நீங்கள் முடியாது என்று சொன்னதை முடித்துக் காட்டுபவர்தான் மோடி.''

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x