Published : 05 Feb 2018 12:21 PM
Last Updated : 05 Feb 2018 12:21 PM

அம்மா இருசக்கர வாகனத் திட்டம்; விண்ணப்பிக்க இன்றே கடைசி

 அம்மா இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். விண்ணப்பத்தாரர்களுக்கு உதவ சிறப்பு ஏற்பாடுகளை அரசுத் தரப்பில் செய்யப்பட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, பெண்கள் தங்களது பணியிடங்களுக்கு செல்வதில் உள்ள சிரமங்களை உணர்ந்து, மகளிர் பணியிடங்களுக்கு எளிதில் செல்லும் வகையில் இரு சக்கர வாகனங்கள் வாங்க 50 சதவீத மானியம் வழங்கும்  திட்டத்தினை தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தார்.

ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24 அன்று முதல், உழைக்கும் மகளிருக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கப்படவுள்ளன. பணிபுரியும் மகளிர் மற்றும் திருநங்கையர் தங்கள் பணியிடங்களுக்கு சென்று வரவும் மற்றும் வங்கிகளுக்குச் சென்று வர ஏதுவாக அவர்களுக்கு ஏற்ற வகையில் கியர் இல்லாத, ஆட்டோ கியர் (கைனடிக்), 125 சிசி கொள்-திறனுக்கு மிகாமல் இருக்கும் இரு சக்கர வாகனத்தினை அவர்களின் விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்து கொள்ளலாம்.

18 வயது முதல் 40 வயதுக்குட்பட்ட ஆண்டு மொத்த வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குட்பட்ட உழைக்கும் பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் கடந்த 22-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வந்தது. பிப்ரவரி-5 (இன்று) விண்ணப்பிக்க இறுதி நாள் என்று அரசு அறிவித்திருந்தது. இன்று மாலை 5 மணியுடன் விண்ணப்பிக்கும் நேரம் முடிகிறது. இதையடுத்து விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணி நாளை முதல் துவங்குகிறது.

தகுதியான பெண்கள் தேர்வு செய்யப்பட்டவுடன் அவர்கள் இருசக்கர வாகனம் வாங்க 50% மானியத்தை அரசு வழங்கும். இந்த திட்டத்தை முதல்வர் பழனிசாமி வரும் பிப்ரவரி 24 ஜெயலலிதா பிறந்த நாளன்று தொடங்கி வைக்கிறார். இத்திட்டம் மூலம் 1 லட்சம் பெண்களுக்கு இலவச இருசக்கர வாகனம் கிடைக்கும்.

திட்டத்தின் பயன் மற்ற விபரங்கள்.

மாற்றுத்திறனாளிகளுக்கும் வாகனம்

மாற்றுத்திறனாளிகளின் உபயோகத்திற்கேற்ப வடிவமைக்கப்பட்ட மூன்று சக்கர வாகனங்களும் வாங்கலாம். மேலும் தங்களது சொந்த நிதி அல்லது வங்கிகள் மூலமாகக் கடன் பெற்று, இரு சக்கர வாகனம் வாங்கிக் கொள்ளலாம். புதிய இரு சக்கர வாகனங்கள் வாங்க 50 சதவீதம் மானியம் அல்லது ரூ. 25,000/- இவற்றில் எது குறைவோ அத்தொகையை அரசு மானியமாக வழங்கும். இம்மானியமானது மகளிரின் வாழ்வாதாரத்திற்கு வழங்கப்படுவதால், பயனாளிகள் வாகனத்தை மூன்று ஆண்டுகளுக்கு யாருக்கும் மாற்றவோ / விற்கவோ கூடாது.

மானியம் பெற தகுதி உடையவர் யார்?

சுயதொழில் புரிபவர், கடைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள், அரசாங்க நிதி உதவி பெறும் நிறுவனங்கள், அரசாங்க தொழில் திட்டங்கள், சமுதாயம் சார்ந்த அமைப்புகளில் (ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்புச் சங்கம், மக்கள் கற்றல் மையம்) தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவர்கள், வங்கி வழிநடத்துநர்கள் மற்றும் ஆஷா பணியாளர்கள், அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் அமைப்பில் பதிவு செய்த மகளிர் போன்றோர் மானியம் பெற தகுதியுடையவராவர்.

மேலும் தொலைதூரங்கள் / மலைப்பிரதேசங்களில் வசிப்பவர்கள், மகளிரை தலைவராகக் கொண்ட குடும்பங்கள், கணவனால் கைவிடப்பட்டவர், மாற்றுத்திறனாளி, ஆதரவற்ற விதவை, 35 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாதவர், ஆதிதிராவிடர் / பழங்குடியினர் மற்றும் திருநங்கையர்கள் ஆகியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஒரு குடும்பத்தில் ஒரு நபர் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியுடையவராவார்.

வயது, தகுதி என்ன?

பயனாளி விண்ணப்பிக்கும் நாளில் 18 வயதிலிருந்து 40 வயதிற்குட்பட்டவராகவும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவராகவும், தமிழ்நாட்டில் வசிப்பவராகவும் இருப்பதுடன், ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும். இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கான உரிமமும் பெற்றிருக்க வேண்டும்.

எங்கு விண்ணப்பிக்கலாம்?

விண்ணப்பங்கள் இன்று முதல், மாவட்ட ஆட்சியரகம் / மாநகராட்சி / நகராட்சி / பேரூராட்சி / வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் விலையில்லாமல் வழங்கப்படும். விண்ணப்பக் கட்டணம் ஏதும் கிடையாது. விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து மேற்கண்ட அலுவலகங்களிலேயே நேரடியாகவோ அல்லது விரைவு / பதிவு அஞ்சல் மூலமாக பிப்ரவரி 5 வரை அன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

சொந்த நிதியில் வாங்கினாலும் மானியம் உண்டு

கூடுதல் விவரங்களுக்கு மேற்கண்ட அலுவலகங்களில் உள்ள உரிய அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். திட்டப் பயனாளிகளை, சென்னை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தலைமையில் உள்ள தேர்வுக் குழுவின் மூலம் தேர்வு செய்யப்படுவர். தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர் தனது சொந்த நிதியில் வாகனத்தை வாங்கினால், வாகனப் பதிவிற்கான சான்றை பயனாளி அளித்த பிறகு பயனாளியின் வங்கிக் கணக்கில் மானியம் நேரடியாக செலுத்தப்படும்.

வங்கிக் கடன் மூலம் எப்படி பெறுவது?

பயனாளி வங்கி மூலமாகக் கடன் பெற விரும்பினால் அதற்கான விண்ணப்பத்தினை அவர்கள் விரும்புகிற வங்கி அல்லது நிதி நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். மேற்கூறிய இரண்டு வகையிலும் பயனாளி முதலில் வாகனத்தை வாங்கி, அதற்கான மானியத்தை கோரும் விண்ணப்பத்தை 45 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

எத்தகைய ஆவணங்களை சமர்பிக்கலாம்?

(1) இருப்பிடத்திற்கான ஆவணம், (2) வயது மற்றும் பிறந்த தேதிக்கான ஆவணம் (பிறப்புச் சான்றிதழ் / பள்ளி மாற்றுச் சான்றிதழ் / பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்) (3) வருமானச் சான்றிதழ் (4) ஓட்டுநர் உரிமம் (5) கடவுச் சீட்டு அளவு புகைப்படம்

(6) அமைப்புச்சாரா நல வாரியத்திலிருந்து பெற்ற அடையாள அட்டை, மாற்றுத் திறனாளிகளாக இருப்பின் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையிடமிருந்து பெற்ற அடையாள அட்டை (7) பணி புரிவதற்கான சான்றிதழ் (பணியமர்த்தியவரிடமிருந்து பெற்ற சான்றிதழ்) (8) ஆதார் அட்டை (9) சாதிச் சான்றிதழ் (10) வாகனத்திற்கான விலைப்புள்ளி ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x