Published : 05 Feb 2018 10:24 AM
Last Updated : 05 Feb 2018 10:24 AM

தேர்தலில் தோற்றவுடன் அதிமுகவை விட்டு ஓடி விடுவார்கள்: ஓபிஎஸ், ஈபிஎஸ் பற்றி தினகரன் விமர்சனம்

தேர்தலில் தோற்றவுடன் அதிமுகவை விட்டு விலகி ஓடி வேறு கட்சியில் சேர இப்போதே துண்டு போட்டு வைத்துள்ளார்கள் என ஓபிஎஸ், ஈபிஎஸ் பற்றி டிடிவி தினகரன் விமர்சனம் செய்தார்.

வெற்றிப்பயணம் என்ற பெயரில் டிடிவி தினகரன் சுற்றுப்பயணம் செய்து வருகிறார், நேற்று தஞ்சாவூரில் மக்களை சந்தித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

“தமிழகத்தில் மத பேதத்தை உருவாக்க பாஜக முயற்சிக்கிறது. சிறுபான்மை மக்களின் மத சுதந்திரத்தில் தலையிட்டு அவர்களை அச்சுறுத்தும் வகையில் முத்தலாக் தடைச்சட்டம், ஹஜ் மானியம் ரத்து போன்றவைகளை அமல்படுத்துகின்றனர். ஜெயலலிதா இருந்தவரை தமிழகத்தில் மதவாத சக்திகளை ஊடுருவாமல் பார்த்துக்கொண்டார்.

காவிரி வரலாறு எனக்கு தெரியாது என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் பிறந்த எனக்கு காவிரி வரலாறு தெரியாதா? அதை ஓபிஎஸ் சொல்வதுதான் இன்னும் வேடிக்கையாக உள்ளது. நீதிமன்றம் மூலம் நமது உரிமைகளுக்காக போராடாத இவர் வரலாறு பற்றி பேசுகிறார்.

இவர்கள் ஆட்டமெல்லாம் தேர்தல் வரையிலும் தான். பேச்சுவார்த்தை நடத்துவதைக்கூட கவுரவம் போல் நினைக்கிறார் முதல்வர் எடப்பாடி. போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டம் நடந்தபோது அதை தானே உடனடியாக தலையிட்டு தீர்த்து வைக்காமல் தனது அமைச்சர்களை விட்டு பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டிருந்தார்.

மக்கள் கடுமையான இன்னலுக்கு ஆளானார்கள், நல்ல வேலையாக நீதிமன்றம் தலையிட்டு பிரச்சனையை தீர்த்து வைத்தது. பேச்சு வார்த்தை நடத்துவதைக் கூட முதல்வரான இவர் கவுரவம் பார்க்கிறார். எப்படியாவது ஆட்சியை தள்ளிக்கொண்டு போக வேண்டும் என்பதே இவர்கள் எண்ணம்.

தேர்தல் வரைதான் இவர்கள் ஆட்டம் எல்லாம். தேர்தலில் தோல்வி அடைந்தவுடன் அதிமுகவை விட்டுவிட்டு ஓடிவிடுவார்கள். வேறு கட்சியில் போய் இணைய இப்போதே துண்டு போட்டு வைத்துவிட்டார்கள். எந்தக்கட்சி என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.”

இவ்வாறு தினகரன் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x