Published : 05 Feb 2018 09:49 AM
Last Updated : 05 Feb 2018 09:49 AM

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமருக்கு தமிழக அமைச்சர்கள் தொடர்ந்து அழுத்தம் தர வேண்டும்: தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வேண்டுகோள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு பிரதமருக்கு தமிழக மூத்த அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் வேல் முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வேலூரில் நூலகத் திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் வேல் முருகன் நேற்று வேலூர் வந்தார். வாலாஜாவில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்துக்கு காவிரி நீர் நிச்சயமாக கிடைக்காது என பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியசாமி கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. காவிரி நீர் தமிழகத்தின் உரிமை, அதைத் தர முடியாது என கூற கர்நாடகாவுக்கு உரிமையில்லை.

அதிமுக உறுப்பினர் அட்டை இருப்பவர்களுக்கு அரசு சலுகைகள் வழங்க முன்னுரிமை அளிக்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜு கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெளி மாநிலத்தாரும் பங்கு பெறலாம் என்ற முடிவை அரசு திரும்பப் பெற வேண்டும்.

தமிழக அரசின் வேலைகள் தமிழர்களுக்கே கிடைக்க வேண்டும். குரூப் 1 தேர்வு எழுதுவோருக்கான உச்சவரம்பு வயது தமிழகத்தில் 35-ஆக இருக்கிறது. பிற மாநிலங்களில் இருப்பது போல் வயது உச்சவரம்பை தமிழக அரசு உயர்த்த வேண்டும்.

தமிழர் வேலை வாய்ப்பு உறுதிச் சட்டம் என்ற புதிய சட்டத்தை தமிழக அரசு வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் இயற்ற வேண்டும். தமிழக அரசுப் பணிக்கு பணம் பெற்றுக்கொண்டு வெளிமாநிலத்தவரை பணி அமர்த்துவதை அரசு தடுக்க வேண்டும். இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும்.

யார், யாரோ தமிழகத்துக்குள் உலாவுகின்றனர். இதனால், தமிழர்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பற்ற சூழல் உருவாகியுள்ளது. இதை தமிழக அரசு தடுக்க வேண்டும். தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் ஊழல், லஞ்சம் பெருகியுள்ளது.

பிற மாநிலத்தார் தமிழகத்தை மதிக்கும் வகையில் முன்னாள் முதல்வர்கள் செயல்பட்டார்கள். தற்போதுள்ள அரசால் தமிழர்கள் தன்மானத்தை இழந்து வருகிறோம்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக மூத்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவாக சென்று பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார்.

அப்போது, வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் சுதாகர் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x