Published : 05 Feb 2018 09:35 AM
Last Updated : 05 Feb 2018 09:35 AM

அன்னூரில் பெண் கொலை, கொள்ளை வழக்கில் மேற்குவங்கத்தில் மூவரை கைது செய்தது கோவை போலீஸ்: தனிப்படை போலீஸாருக்கு காவல்துறை அதிகாரிகள் பாராட்டு

கோவை அன்னூரில் பெண் கொலை செய்யப்பட்டு, நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்பட்ட 3 நபர்களை மேற்குவங்கம் சென்று கோவை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் அன்னூர் அடுத்துள்ள கணுவக்கரையைச் சேர்ந்தவர் மயில்சாமி (54). இவரது மனைவி ராஜாமணி (50). தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தனர். மகள்கள் சுகன்யா, ஜனனி இருவரும் கோவையில் தங்கி வேலை செய்து வந்தனர். இதனிடையே மயில்சாமி தனது தோட்டத்தில் புதிய வீடு கட்டி வருகிறார். அதற்கான கிரானைட் கற்கள் ஒட்டும் பணிக்காக வடமாநிலத்தவர்களை வேலைக்கு அமர்த்தினார். அவர்கள் அங்கேயே தங்கி கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஜன.25-ம் தேதி நள்ளிரவு, கட்டுமானப் பணிக்கு வந்திருந்த வடமாநில இளைஞர்கள், மயில்சாமி தங்கியிருந்த வீட்டின் கதவைத் தட்டி தண்ணீர் கேட்டுள்ளனர். தண்ணீர் கொடுக்க கதவைத் திறந்த மயில்சாமியின் முகத்தில் மின்சாரத்தை பாய்ச்சினர். இதில் அவர் மூர்ச்சையடைந்தார். சத்தம் கேட்டு வந்த ராஜாமணியை பூரிக்கட்டையால் தாக்கி கொலை செய்தனர். நகை, பணத்துடன் அங்கிருந்து தப்பினர். நினைவு திரும்பிய மயில்சாமியிடம் பெற்ற புகாரின்பேரில் அன்னூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளைத் தேடி வந்தனர். கொலையில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்கள் தமிழகத்திலிருந்து வெளியேறியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய தனிப்படை போலீஸார், 8 நாட்களில் மேற்கு வங்கத்தில் வைத்து கொலையில் தொடர்புடைய 3 இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறப்படும் நகை, பணம் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.மூர்த்தி தெரிவித்ததாவது: தனியாக வசித்த வயதான முதியவர்களிடம் குறைந்த கூலியில் கிரானைட் கற்கள் பதித்து தருவதாக பேசி, வேலைக்கு சேர்ந்துள்ளனர்.

அந்த தம்பதி எதார்த்தமாக பேசியதை சாதமாக பயன்படுத்தி கொலை, கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். கிரானைட் கற்களை வெட்ட பயன்படும் இயந்திரத்துக்கான மின் இணைப்பை பயன்படுத்தி மயில்சாமி மீது மின்சாரத்தை பாய்ச்சியுள்ளனர்.

பின்னர் ராஜாமணியை கொலை செய்துவிட்டு, வீட்டிலிருந்த ரூ.1 லட்சம் பணம், ராஜாமணி அணிந்திருந்த நகையை கொள்ளையடித்துக் கொண்டு, சேவூர் சாலையில் உள்ள தங்கியிருந்த மனோஜ் என்பவரோடு திருப்பூரில் இருந்து ரயிலில் தப்பிவிட்டனர்.

5 தனிப்படைகள் அமைத்து, கொலையாளிகள் மூவரும் பயன்படுத்திய செல்போன் அழைப்புகள் அடிப்படையில் மாவட்ட சைபர்கிரைம் பிரிவு மூலம் விசாரிக்கப்பட்டது. அதில் சம்பந்தப்பட்ட நபர்கள் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. நான்கு நாட்களில் மேற்கு வங்கம் சென்று விசாரித்தது, ஜல்பாய்குரி மாவட்டம் கோட்வாலி போலீஸ் லேன் பகுதியைச் சேர்ந்த சாம்ராட்ஷா (25), பிண்டுமாலிக் (26), அஜய்ராய் (19) ஆகிய மூவரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின்படி கொள்ளையடித்த பணம் ரூ.1லட்சம், நகையை உருக்கிய தங்கக்கட்டி என அனைத்து பொருட்களும் மீட்கப்பட்டன. கோவை முதன்மை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர் என்றார்.

கொலையில் தொடர்புடையவர்களை மேற்கு வங்கம் சென்று பிடித்த தனிப்படை போலீஸாருக்கு மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பாராட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x