Published : 05 Feb 2018 08:29 AM
Last Updated : 05 Feb 2018 08:29 AM

தனியார் மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக கூறி ரூ. 25 லட்சம் மோசடி செய்தவர் கைது

தனியார் மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.25 லட்சம் மோசடி செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை, கொளத்தூர் அருகே உள்ள லட்சுமிபுரம், வஉசி தெருவைச் சேர்ந்தவர் முருகன் (43). இவர் கடந்த 2016-ம் ஆண்டு, மருத்துவக் கல்லூரியில் படிக்க தன் மகளுக்கு சீட் பெற்றுத் தருமாறு, திருவள்ளூர் அருகே உள்ள பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சந்திரன்(49) என்பவரை அணுகினார்.

அப்போது சந்திரன், “சேலத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் தனக்கு அறிமுகமான தரகர்களான ஜெயச்சந்திரன், ராமசாமி ஆகியோர் மூலம் மருத்துவப் படிப்பு படிக்க சீட் வாங்கித் தருவதாகவும், அதற்கு ரூ.38 லட்சம் செலவாகும் எனவும்” தெரிவித்துள்ளார்.

இதனை ஏற்றுக்கொண்ட முருகன், முதல் தவணையாக ரூ.25 லட்சத்தை சந்திரனிடம் அளித்துள்ளார். ஆனால், சொன்னபடி, மருத்துவப் படிப்புக்கான சீட் கிடைக்கவில்லை. ஆகவே, இதுகுறித்து சந்திரனிடம் கேட்டுள்ளார். அதற்கு சந்திரன், “எங்கள் கமிஷன் தொகை போக, ரூ.23 லட்சத்தை கல்லூரி உரிமையாளரிடம் கொடுத்துவிட்டோம். விரைவில் மருத்துவ படிப்புக்கான சீட் கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

அதன்பிறகு சில மாதங்கள் கழிந்தும் மருத்துவ படிப்புக்கான சீட் கிடைக்காததால், சந்தேகமடைந்த முருகன் தான் கொடுத்த பணத்தை திருப்பி அளிக்குமாறு கேட்டுள்ளார். ஆனால், சந்திரன் தரப்பினர், முருகனிடம் வாங்கிய பணத்தை தராமல் ஏமாற்றி வந்துள்ளனர்.

இதுகுறித்து, திருவள்ளூர் எஸ்பி சிபிசக்ரவர்த்தியிடம் அளிக்கப்பட்ட புகார் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் கண்ணப்பன் தலைமையிலான போலீஸார், சந்திரன் உள்ளிட்டோரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையிலான போலீஸார், நேற்று முன்தினம் இரவு, திருவள்ளூர் பகுதியில் சந்திரனை கைது செய்தனர்.

மேலும், இந்த மோசடி தொடர்பாக, தலைமறைவாக உள்ள தரகர்களான ஜெயச்சந்திரன், ராமசாமி மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி உரிமையாளர் ஆகியோரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x