Published : 05 Feb 2018 08:27 AM
Last Updated : 05 Feb 2018 08:27 AM

இயற்கை மூலப்பொருட்களால் தயாரிக்கப்பட்ட பை அறிமுகம்: பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க காஞ்சி நகராட்சி நடவடிக்கை

பிளாஸ்டிக் இல்லாத காஞ்சி நகரை உருவாக்கும் வகையில் மக்காச்சோளம், மரவள்ளி கிழங்கின் மாவை மூலப்பொருட்களாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ‘பை’ காஞ்சிபுரம் நகர வியாபாரிகளுக்கு, நகராட்சி நிர்வாகம் நேற்று அறிமுகப்படுத்தியது.

காஞ்சி நகரின் கடைகளில் புழக்கத்தில் உள்ள பிளாஸ்டிக் பை பயன்பாட்டை குறைக்கவும், அவற்றால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசை கட்டுப்படுத்தவும் வியாபாரிகளின் ஆலோசனைக் கூட்டம், நகராட்சி நிர்வாகம் சார்பில் அண்ணா அரங்கில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, நகராட்சி ஆணையர் சர்தார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பிளாஸ்டிக் பைக்கு மாற்றாக மக்காச்சோளம், மரவள்ளிக் கிழங்கில் உள்ள மாவுப் பொருளை மூலப்பொருட்களாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட பை நகராட்சி நிர்வாகம் சார்பில் வியாபாரிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பை சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது என்றும், அதிகளவு சூடான தண்ணீரில் கரையக் கூடியது மற்றும் எரித்தாலும் சாம்பலாகி விடும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, இந்த பை தொடர்பாக வியாபாரிகளின் கேள்விகளுக்கு நகராட்சி அதிகாரிகள் மற்றும் பை தயாரிக்கும் நிறுவனத்தின் பணியாளர்கள் விளக்கமளித்தனர்.

இதுகுறித்து, நகராட்சி சுகாதார அலுவலர் முத்து கூறியதாவது:

பிளாஸ்டிக் பை மண்ணில் மக்காது என்பதால் மறுசுழற்சி முறையில் மீண்டும் அதைப் பயன்படுத்தும் நிலை உள்ளது. ஆனால், இயற்கை மூலப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த பை மண்ணில் புதைந்தால் 3 மாதங்களில் மக்கிவிடும் தன்மையுடையது. மேலும், மண்ணில் புதையும் பொருட்கள் மீது வெப்பம் அதிகரித்து இயற்கையாக மக்கும். இந்த பை சூடான தண்ணீரிலேயே கரைந்து விடும். அதனால், மண்ணில் புதையும்போது மண்ணில் உள்ள வெப்பத்தால் இயற்கையாகவே மக்கிவிடும். தீயிட்டு எரித்தாலும் பிளாஸ்டிக் போன்று உருகாமல், சாம்பலாகிவிடும் தன்மையுடையது.

உணவகங்களில் சாம்பார் கட்டித்தரப்படும் பிளாஸ்டிக் பை போன்று இதனைப் பயன்படுத்த முடியாது. இருப்பினும் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவு பயன்பாட்டில் உள்ள காஞ்சிபுரம் நகருக்கு இது தேவையானது. எனவே இதை அறிமுகப்படுத்தியுள்ளோம். கோயம்புத்தூர் நகரில் ஏற்கெனவே இந்த பை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில்கொண்டு பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து, இது மாதிரியான பொருட்களைப் பயன்படுத்த வியாபாரிகள் முன்வர வேண்டும் என்றார்.

இதுகுறித்து, அந்நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் எஸ்.சிபி கூறியதாவது:

பல்வேறு சோதனைகளுக்கு பிறகே இந்த பையை அறிமுகப்படுத்தியுள்ளோம். பிளாஸ்டிக் பை போன்ற பல்வேறு வடிவங்களிலும் இது கிடைக்கும். மேலும், 10 கிலோ பொருளைத் தூக்கி செல்லும் அளவு கொண்ட பிளாஸ்டிக் பை வடிவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பையில், 8 கிலோ பொருளை எடுத்து செல்லமுடியும். குறைந்தபட்சமாக ஒரு பை ரூ.2-க்கு கிடைக்கும். மேலும், பை தேவைப்படுவோர் அதன் விலை, அளவுகள், பயன்பாடுகள் போன்ற தகவல்களை www.regeno.in என்ற இணையதள முகவரியின் மூலம் அறிந்துகொள்ளலாம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x