Last Updated : 05 Feb, 2018 08:12 AM

 

Published : 05 Feb 2018 08:12 AM
Last Updated : 05 Feb 2018 08:12 AM

ரெப்கோ நுண்கடன் நிறுவனம் மூலம் மகளிர் சுயதொழிலுக்கு ரூ.540 கோடி கடனுதவி

பெண்கள் சுயதொழில் தொடங்குவதற்காக ரெப்கோ வங்கியால் தொடங்கப்பட்ட ரெப்கோ நுண்கடன் நிறுவனம் நடப்பு நிதியாண்டில் 1.53 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.540 கோடி கடனுதவி வழங்கியுள்ளதாக அந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆர்.எஸ்.இசபெல்லா தெரிவித்துள்ளார்.

பர்மா மற்றும் இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மக்களின் மறுவாழ்வுக்காக 1969-ம் ஆண்டு ‘ரெப்கோ’ வங்கி எனப்படும் ‘தாயகம் திரும்பியோர் கூட்டுறவு நிதி மற்றும் மேம்பாட்டு வங்கி’ தொடங்கப்பட்டது. இந்த வங்கியின் துணை நிறுவனமாக ரெப்கோ நுண்கடன் நிறுவனம், நடப்பு நிதியாண்டில் 1.53 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.540 கோடி மதிப்பிலான கடனுதவியை வழங்கியுள்ளது.

இதுகுறித்து ரெப்கோ நுண்கடன் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆர்.எஸ்.இசபெல்லா ‘தி இந்து’விடம் கூறியதாவது:

பெண்கள் சுயதொழில் புரியவும், அவர்களை தொழில் முனைவோராக உருவாக்குவதற்காகவும் இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் தமிழகம் முழுவதும் தற்போது 76 கிளைகளுடன் 31 மாவட்டங்களில் தனது சேவையை செய்து வருகிறது. பயனாளிகளுக்கு பல்வேறு சுயதொழில்களைப் புரிவதற்கு நுண்கடன் வழங்கப்படுகிறது.

குறிப்பாக, கறவை மாடு வாங்க, பால்பண்ணை தொடங்க, உணவு பண்டங்கள் உற்பத்தி செய்ய, மகளிருக்கான நாப்கின் தயாரிப்பு, ஊறுகாய், ஊதுவத்தி, தோல் பொருட்கள், மெழுகுவர்த்தி தயாரித்தல் உட்பட பல்வேறு தொழில்களைத் தொடங்க கடனுதவி வழங்கப்படுகிறது.

18 முதல் 55 வயது வரை உள்ள மகளிருக்கு கடனுதவி வழங்கப்படுகிறது. சுயஉதவிக் குழுவில் 5 முதல் 20 பேர் வரை உள்ள பயனாளிகள் இணைந்து செயல்படும் குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை நுண்கடன் வழங்கப்படுகிறது. கடன் வழங்குவதோடு மட்டுமின்றி பயனாளிகளுக்கு தொழில்முனைவோர் பயிற்சி, களப்பயிற்சி, பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.

நடப்பு நிதியாண்டில் இந்நிறுவனம் சார்பில் 1.53 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.540 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. 2019-ம் நிதியாண்டில் 5 லட்சம் பயனாளிகளுக்கு ரூபாய் ஆயிரம் கோடி கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பெண்கள் பயன்படுத்தி சிறந்த தொழில்முனைவோராக ஆகி எதிர்காலத்தில் யாரையும் சார்ந்திருக்காமல் தங்களது சொந்தக் காலில் நிற்கும் நிலையை எட்ட வேண்டும்.

இவ்வாறு இசபெல்லா கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x