Published : 05 Feb 2018 08:09 AM
Last Updated : 05 Feb 2018 08:09 AM

லஞ்ச வழக்கில் துணைவேந்தர் கைது: தவறு செய்தால் யாராக இருந்தாலும் நடவடிக்கை- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டம்

பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கைது தொடர்பாக சட்டப்படி விசாரணை நடத்தப்படும். தவறு செய்தவர்கள் அரசனாக இருந்தாலும், ஆண்டியாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாக தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் 17 ஆண்டுகளாக விசாரித்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பின்படி காவிரியில் நமக்கு உரிமை இருக்கிறது. காவிரி தண்ணீர் கிடைக்காது என்று சுப்பிரமணியன் சுவாமி சொல்லியிருந்தால், அதற்கான காரணத்தையும் அவர்தான் சொல்ல வேண்டும். அரசின் எந்தத் திட்டமாக இருந்தாலும் அது ஏழை, எளிய மக்களுக்காக அர்ப்பணிக்கப்படும். அதுதான் தமிழக அரசின் கொள்கையாகும்.

தமிழகத்தில் 7 ஆண்டுகளாக பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை. டீசல் விலை தினந்தோறும் உயர்ந்துகொண்டே போகிறது. போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தித் தர வேண்டிய நிலையில் இருக்கிறோம். பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகும் அண்டை மாநிலங்களைவிட தமிழகத்தில் கட்டணம் குறைவாகத்தான் இருக்கிறது.

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்திருப்பது தொடர்பாக கேட்கிறீர்கள். இதுகுறித்து விசாரணை நடத்தப்படும். யார் தவறு செய்திருந்தாலும், அவர்கள் அரசனாக இருந்தாலும், ஆண்டியாக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x