Published : 05 Feb 2018 07:57 AM
Last Updated : 05 Feb 2018 07:57 AM

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீப்பற்றிய தூண்களில் வெப்பத்தை தணிக்கும் பணி: மூன்றாவது நாளாக தண்ணீர் செலுத்தி குளிர்விப்பு

மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் வெப்பத்தை தணிக்கும் வகையில் கல் தூண்கள், மேற்கூரை பகுதிகளில் தீயணைப்பு வீரர்கள் 3-ம் நாளாக நேற்றும் தண்ணீரை பீய்ச்சி அடித்து குளிர்வித்தனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் கிழக்கு கோபுர பகுதி யில் ஆயிரங்கால் மண்டபம் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளில் பூஜை பொருட்கள், பொம்மை, விபூதி, குங்குமம், விளையாட்டு சாமான்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன.

இங்கு கடந்த 2-ம் தேதி இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 36 கடைகள் எரிந்து கருகின. பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலாயின. சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாகக் கொழுந்துவிட்டு எரிந்த தீயால் வீர வசந்தராயர் மண்டபத்தில் 7 ஆயிரம் சதுரடி பரப்பில் மேற்கூரை பெயர்ந்தது. சில கல் தூண்களும் அனல் தாக்கியதில் சேதம் அடைந்தன.

தீ விபத்தால் சேதமடைந்த இடத்தை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க கோயில், பொதுப்பணித் துறை பொறியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.

மதுரை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தலைமையிலான குழுவினர் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.

இந்நிலையில் தீப்பற்றிய பகுதியில் வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகமாக இருந்தது. இதையடுத்து மாநகராட்சி லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டன. அம்மன் சன்னதிக்கு செல்லும் வழியில் அன்னதான மண்டபம் அருகே லாரிகளை நிறுத்தி தீ விபத்தில் சேதம் அடைந்த வசந்தராயர் மண்டபப் பகுதி முழுவதும் தண்ணீரை பீய்ச்சி அடித்து குளிரவைத்தனர். கல் தூண்கள், மேற்கூரையிலும் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

இப்பணியால் கிழக்கு கோபுரம் வழியாக பக்தர்கள் செல்வது 3-வது நாளாக தடை செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் கூட்டம், கூட்டமாக வந்து சம்பவப் பகுதியை தூரத்தில் நின்று வேதனையுடன் பார்த்துச் செல்கின்றனர். இச்சம்பவத்தையொட்டி 500-க்கும் மேற்பட்ட போலீஸார் கோயிலைச் சுற்றிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x