Published : 05 Feb 2018 07:54 AM
Last Updated : 05 Feb 2018 07:54 AM

பட்ட மேற்படிப்பு தரவரிசை பட்டியல் பிப்.15-ல் வெளியீடு: தமிழக அரசிடம் மார்ச் 10-க்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்

மருத்துவப் பட்ட மேற்படிப்புகளில், ஆரம்ப சுகாதார நிலையங்கள், உள்ளடங்கிய பகுதிகளைச் சேர்ந்த அரசு டாக்டர்களுக்கு வழங்குவதுபோல, மாவட்ட, தாலுகா மருத்துவமனைகளில் பணியாற்றும் அரசு டாக்டர்களுக்கும் இந்த ஆண்டு மதிப் பெண் வழங்க முடிவு செய்யப் பட்டுள்ளது.

நாடு முழுவதும் அரசு, தனி யார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் எம்.டி., எம்.எஸ். பட்ட மேற்படிப்பு, பட்டய மேற்படிப்புக்கு (டிப்ளமோ) சுமார் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் சுமார் 8 ஆயிரம் இடங்கள் உள்ளன. தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET - நீட்) தகுதி பெறுபவர்களைக் கொண்டு இந்த இடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த இடங்களுக்கு 2018-19ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த மாதம் 7-ம் தேதி நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். இதன் முடிவு கள் கடந்த 23-ம் தேதி வெளியிடப்பட்டன.

நீட் தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வரும் 15-ம் தேதி வெளியிடப்படுகிறது. இதைத் தொடர்ந்து, மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக் கான கலந்தாய்வு தொடங்க உள் ளது.

இதற்கிடையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள பட்ட மேற்படிப்புகளுக்கான இடங்களில் ஏற்கெனவே இருந்த, அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று அரசு டாக்டர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதுபற்றிய கோரிக்கை மனுவை மத்திய, மாநில அரசுகளுக்கும் அனுப்பியுள்ளனர். இதுபற்றி அரசு டாக்டர்கள் கூறியதாவது:

தமிழகத்தில் எம்பிபிஎஸ் முடித்துவிட்டு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் வழங்கப்பட்டு வந்த 50 சதவீத இடஒதுக்கீடு கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதிலாக மதிப்பெண் வழங்கும் முறை அறிமுகப் படுத்தப்பட்டது.

அதன்படி கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், மலைப் பிரதேசங்கள், உள்ளடங்கிய பகுதிகளான திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ஓராண்டு பணியாற்றிய டாக்டர்களுக்கு 10 சதவீதம், இரண்டு ஆண்டுக்கு 20 சதவீதம், மூன்று ஆண்டுக்கு 30 சதவீதம் என வெயிட்டேஜ் தரப்பட்டு, அவர்கள் நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், இந்த மதிப்பெண் கணக்கிட்டு வழங்கப் பட்டது.

மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் உள்ளிட்ட நகர்ப்புறப் பகுதிகளுக்கு மதிப்பெண் வழங்கப்படாததால், அங்கு பணியாற்றிய அரசு டாக்டர்களால் மருத்துவப் பட்ட மேற்படிப்புகளில் சேரமுடியாத நிலை ஏற்பட்டது. இடங்களை தேர்வு செய்வதில் தமிழக அரசு பாரபட்சம் காட்டுகிறது. அரசு டாக்டர்களிடம் ஒற்றுமையை சீர்குலைக் கப் பார்க்கிறது. எனவே, முன்பு இருந்ததுபோல, அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதை சமாளிக்கும் விதமாக, மருத்துவப் பட்ட மேற்படிப்புகளில் அரசு டாக்டர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து முடிவு எடுக்க 6 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு கடந்த மாதம் அமைத்தது. டாக்டர்கள், சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பல தரப்பினரின் கருத்துகளைக் கேட்டு, கடந்த ஆண்டுபோல பிரச்சினை வராமல் தடுக்க கூடு தல் இடங்களை சேர்க்க குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “மருத்துவப் பட்ட மேற்படிப்புகளில் அரசு டாக்டர்களுக்கு மீண்டும் 50 சதவீத இடஒதுக்கீடு முறையைக் கொண்டுவருவது சிரமம். அதனால், கடந்த ஆண்டுபோல இல்லாமல், இந்த ஆண்டு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகள், தாலுகா அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் அரசு டாக்டர்களுக்கு மதிப்பெண் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் இறுதி அறிக்கை தயாரிக்கப்படவில்லை. தமிழக அரசிடம் மார்ச் 10-ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x