Published : 05 Feb 2018 07:49 AM
Last Updated : 05 Feb 2018 07:49 AM

ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை நிறைவேற்றக் கோரி மின் வாரிய ஊழியர்கள் நாளை ஆர்ப்பாட்டம்

ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை நிறைவேற்ற வலியுறுத்தி பிப். 6 மற்றும் 8 ஆகிய தேதிகளில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

மின்வாரிய ஊழியர்களின் புதிய ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக கடந்த 22-ம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. இதில் பிப்.12-ம் தேதிக்குள் ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என மின்வாரிய தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதற்கிடையே, ஒப்பந்தம் கையெழுத்தாவதில் நிலவும் தாமதத்தை கருத்தில்கொண்டு ஊழியர்களுக்கு 4 மாத இடைக்கால நிவாரணத்தை மின் துறை அமைச்சர் அறிவித்தார்.

இது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்யாமல் மேலும் காலதாமதம் செய்வதற்கான நடவடிக்கை என சிஐடியு, பிஎம்எஸ், என்எல்ஓ உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன. அதுமட்டுமின்றி, 12-ம் தேதிக்குள் ஒப்பந்தம் கையெழுத்தாகாவிட்டால் 16-ம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என அந்த தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

இந்நிலையில், ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை 12-ம் தேதிக்குள் நிறைவேற்ற வலியுறுத்தி 9 மின்வாரிய மண்டலங்களில் பிப். 6, 8 தேதிகளில் சிஐடியு, பிஎம்எஸ், என்எல்ஓ உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்களை சேர்ந்த மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். திருநெல்வேலி, மதுரை, திருச்சி, கோவை, ஈரோடு, விழுப்புரம், வேலூர் ஆகிய 7 மண்டலங்களில் 6-ம் தேதியும் சென்னை வடக்கு, தெற்கு மண்டலங்களில் 8-ம் தேதியும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x