Published : 01 Feb 2018 09:23 PM
Last Updated : 01 Feb 2018 09:23 PM

காவிரி பிரச்சினை: அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட கி.வீரமணி வேண்டுகோள்

தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை பெற அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என முதல்வர் பழனிசாமிக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''காவிரியிலிருந்து தண்ணீர் கிடைக்காததால் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் மிகவும் வேதனையில் உள்ளனர். சில மாதங்களில் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால் தமிழகத்தின் நலன்களை பலி கொடுக்க பாஜக தயாராகி விட்டது.

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. கர்நாடக மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக காவிரி பிரச்சினையில் பாஜக அரசு ஒருதலைபட்சமாக நடந்து வருகிறது. நாடாளுமன்றத்தில் 45-க்கும் அதிகமான எம்.பி.க்கள் இருந்தும் அவர்களைச் சந்திக்க பிரதமர் மோடி தயாராக இல்லை. மத்திய அரசு ஆட்டுவிக்கும் பொம்மையாக தமிழக அரசு உள்ளது.

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியில் காவிரி பிரச்சினைக்காக பல நேரங்களில் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி பிரதமரை சந்தித்து வலியுறுத்தியுள்ளனர். எனவே, காவிரியிலிருந்து தமிழகத்துக்கு உரிய தண்ணீரைப் பெற அனைத்துக் கட்சிகள், அமைப்புகளின் கூட்டத்தை முதல்வர் பழனிசாமி கூட்ட வேண்டும். அதில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அனைத்துக் கட்சி தலைவர்களுடன் குடியரசுத் தலைவர், பிரதமர், சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர்களை சந்தித்து வலியுறுத்த வேண்டும். இன்றைய நிலையில் இது மிகவும் அவசியமானது'' என்று வீரமணி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x