Published : 01 Feb 2018 06:29 PM
Last Updated : 01 Feb 2018 06:29 PM

உலகுக்கே வழிகாட்டக் கூடிய பட்ஜெட்: தமிழிசை பாராட்டு

நமது நாடு முழுமையான வளர்ச்சி அடைந்து உலகிற்கே வழிகாட்ட கூடிய குருவாக அமைய வேண்டும் என்ற சீரிய நோக்கில் தயாரிக்கப்பட்ட பட்ஜெட் இது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து தமிழிசை சவுந்தரராஜன் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கான மிக அருமையான வரவு செலவு திட்டம். ஏற்கெனவே திட்டமிட்டபடி அனைவருக்கும் 2022-க்குள் வீடுவழங்கும் திட்டம் வெற்றிகரமாக அமைய முக்கியத்தும் அளிக்கப்பட்டது.

நாட்டு மக்கள் தம்முடைய மருத்துவ செலவினங்களை எதிர்கொள்ளவே, தாம் அரும்பாடுபட்டு சேமித்து வைத்த தங்க நகைகளை அடமானம் வைக்கவோ அல்லது விற்கவோ இருந்த சூழ்நிலையை கருத்தில் கொள்ளப்ப்ட்டுள்ளது.

ஏறக்குறைய 50 கோடி ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் புதியதொரு புரட்சிகரமான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 5 லட்சம் ரூபாய் வரை நிவாரணம் பெறும் வகையில் அறிவித்துள்ளது.

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதன் முறையாக ஏழைகளின் சுகாதாரத்தில் மோடி அரசு எவ்வளவு அக்கறை கொண்டுள்ளது என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது.

125 கோடி மக்கள் வாழும் நாட்டில் போதுமான மருத்துவர்கள் இல்லை என்பதை கவனித்த பிரதமர் 3 நாடாளுமன்ற தொகுதிக்கு ஒரு மருத்துவ ஆராய்ச்சி கல்லூரி உடனே தொடங்க இந்த பட்ஜெட்டில் வழிவகை செய்தது மிக மிக பாராட்டுக்குரியது.

ஒரு பூமாலை அழகானது என்று சொல்ல வேண்டும் என்றால் அதில் உள்ள பூக்களும் நல்லவையாக இருக்க வேண்டும். அதுபோல நமது நாடு முழுமையான வளர்ச்சி அடைந்து உலகிற்கே வழிகாட்டக்கூடிய குருவாக அமைய வேண்டும் என்ற சீரிய நோக்கில் ஏழை, எளிய மக்கள், உழைப்பாளிகள், விவசாயிகள் மீனவர்கள் மாணவர்கள், பெண்கள், மூத்தகுடி மக்கள், நெசவாளர்கள், இளைஞர்கள் என அனைத்து மக்களையும் முன்னேற்றம் அடையும் வகையில் சிறப்பு கவனம் செலுத்திய வளர்ச்சிக்கான வரவு செலவு திட்டம் இது.

தேர்தல் காலத்தில் வழங்கிய வரவு செலவு திட்டமாக இருந்தாலும், வாக்கு வங்கியை கருத்தில் கொள்ளாமல் மக்களின் நலனே தலையாயது என்பதை மனதில் வைத்து இந்த வரவு செலவு திட்டத்தை வழங்கிய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, பிரதமர் நரேந்திர மோடி இருவரையும், தமிழக மக்களின் சார்பில் மனதார தமிழக பாஜக வாழ்த்துகிறது.''

இவ்வாறு தமிழிசை தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x