Published : 01 Feb 2018 04:50 PM
Last Updated : 01 Feb 2018 04:50 PM

கள்ளத்துப்பாக்கி, கள்ள நோட்டு வழக்கு சிபிசிஐடி போலீஸுக்கு மாற்றம்

சென்னையில் பிடிபட்ட கள்ளத்துப்பாக்கி கள்ள நோட்டு வழக்குகள் சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்கு மாற்றப்படுகிறது. இதற்கான உத்தரவை டிஜிபி டி.கே.ராஜேந்திரன் பிறப்பித்துள்ளார்.

குவஹாத்திலிருந்து சென்னை வந்த ரயிலில் பிரதீப், கமல் என்ற இரண்டு பேர் 6 கள்ளத்துப்பாக்கிகள், ரூ.4 லட்சம் கள்ள நோட்டுகளுடன் வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வேப்பேரி காவல் ஆய்வாளர் வீரகுமார் தலைமையிலான போலீஸார் திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் வைத்து அவர்களை மடக்கிப் பிடித்தனர்.

இதற்கு மறுநாள் திருச்சியில் சென்னை செம்பியம் காவல் நிலைய போலீஸ் பரமேஸ்வரன், அயனாவரம் ஆட்டோ டிரைவர் நாகராஜ், அருப்புக்கோட்டையை சேர்ந்த சிவா உள்ளிட்ட 3 பேர் தங்கும் விடுதி ஒன்றில் ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 2 கள்ளத்துப்பாக்கிகள் சிக்கின.

மறுநாள் ஆட்டோ டிரைவர் நாகராஜின் சகோதரியும் தாயும் சென்னையில் கள்ள நோட்டுகளுடன் பிடிபட்டனர். இந்த இரு வழக்குகளும் வெவ்வேறானவை என்றாலும் முதல் வழக்கை திசைதிருப்பவே இரண்டாவது வழக்கில் உள்ளவர்களை சிக்க வைத்ததாக போலீஸ் தரப்பில் ஒரு தகவல் வெளியானது.

இந்நிலையில் முதல் வழக்கில் சிக்கிய கமல், பிரதீப்பை விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சிறையில்தான் இந்த திட்டம் தீட்டப்பட்டதாகவும், ஐஎஸ் உளவு அமைப்புக்கு நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்ட முகமது ரபீக் இவர்களை சிறையிலிருந்து இயக்கியதாகவும் தகவல் வெளியானது.

மேலும் இவர்கள் இருவரும் சிக்கும் முன்னரே இதற்கு முன்னரும் ரூ.10 லட்சமும், 10-க்கும் மேற்பட்ட துப்பாக்கிகளும் கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றி டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

திருச்சியில் கைதான பரமேஸ்வரனை விசாரித்தபோது அந்த வழக்கில் மேலும் பல போலீஸார் சிக்குவதாக தெரிகிறது. இதையடுத்து இந்த வழக்கும் சிபிசிஐடிக்கு மாற்றப்படலாம் என தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x