Published : 01 Feb 2018 10:52 AM
Last Updated : 01 Feb 2018 10:52 AM

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சிலை முறைகேடு வழக்கு : விசாரணை அதிகாரி முன் ஆஜராக முத்தையா ஸ்தபதிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் உற்சவர் சிலை முறைகேடு தொடர்பான வழக்கில் முத்தையா ஸ்தபதி, திருச்சியில் உள்ள விசாரணை அதிகாரி முன்பாக 10 நாட்கள் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு தங்கத்தால் சோமாஸ் கந்தர் உற்சவர் சிலை செய்யப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக தமிழக அரசின் தலைமை ஸ்தபதியான முத்தையா ஸ்தபதி உள்ளிட்ட 9 பேர் மீது சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி முத்தையா ஸ்தபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை ஏற்கெனவே நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நடந்தபோது, சாட்சிகள் அளித்த வாக்குமூலம் தொடர்பான சீலிட்ட அறிக்கை நீதிபதியிடம் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணைக்கு ஆஜராக தயாராக இருப்பதாகவும், தனக்கு முன்ஜாமீன் தர வேண்டுமெனவும் முத்தையா ஸ்தபதி தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் ஆஜராகி, முத்தையா ஸ்தபதிக்கு முன்ஜாமீன் தரக்கூடாது என ஆட்சேபம் தெரிவித்தார். அதுபோல அரசு வழக்கறிஞரும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி, “வரும் 2-ம் தேதி (நாளை) முதல் 10 நாட்களுக்கு முத்தையா ஸ்தபதி தினமும் காலை 10.30 மணிக்கு திருச்சியில் உள்ள விசாரணை அதிகாரி அலுவலகத்தில் ஆஜராக வேண்டும். அவரிடம் மாலை 5.30 மணி வரை விசாரணை நடத்தலாம்.

தேவைப்பட்டால் மருத்துவ உதவி கோரலாம். விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்த பிறகு முன்ஜாமீன் குறித்து முடிவு செய்யப்படும்’’ என உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x