Published : 01 Feb 2018 10:51 AM
Last Updated : 01 Feb 2018 10:51 AM

ஸ்கைப் மூலமாக பேசும் வசதியுடன் பன்னாட்டு ஆன்லைன் வணிகம் கோ-ஆப்டெக்ஸில் தொடக்கம்: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தொடங்கிவைத்தார்

கோ-ஆப்டெக்ஸில் பன்னாட்டு ஆன்லைன் வணிகம் மற்றும் புதிய ரகங்கள் விற்பனையை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணி யன் நேற்று தொடங்கிவைத்தார்.

கோ-ஆப்டெக்ஸில் கடந்த 2014-ம் ஆண்டு ஆன்லைன் வணிக முறை தொடங்கப்பட்டது. அது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், வெளிநாடுவாழ் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், பன்னாட்டு ஆன்லைன் வணிகத்தின் தொடக்க நிகழ்ச்சி, எழும்பூரில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்துகொண்டு, ஸ்கைப் மென்பொருள் மூலமாக பேசும் வசதியுடன் கூடிய பன்னாட்டு ஆன்லைன் வணிகத்தை தொடங்கிவைத்தார். அப்போது மலேசியாவைச் சேர்ந்த பத்மினி சுப்பையா என்பவருடன் ஸ்கைப் மூலமாக பேசி, பன்னாட்டு ஆன்லைன் வணிக முறையில் முதல் விற்பனையை பெற்றுக்கொண்ட அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ‘நவீன காஞ்சி பருத்தி சேலைகள்’, ‘வெல்குரோ வேட்டிகள்’, ‘வேட்டி, சட்டைத்துணி’ ஆகிய புதிய ரகங்களை அறிமுகப்படுத்தினார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

இந்தியாவில் உள்ள கைத்தறி நிறுவனங்களிலேயே முதன்மை நிறுவனமாக கோ-ஆப்டெக்ஸ் விளங்குகிறது. இதில் ஏற்கெனவே ஆன்லைன் முறையில் நடப்பாண்டில் மட்டும் ரூ.1 கோடிக்கு விற்பனை நடைபெற்றுள்ளது. வெளிநாட்டில் வாழும் கோ-ஆப்டெக்ஸ் வாடிக்கையாளரின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக இன்று ‘பன்னாட்டு ஆன்லைன் வணிகம்’ தொடங்கப்பட்டுள்ளது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நுண் ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய ‘நவீன காஞ்சி பருத்தி சேலைகள்’, வேலைப்பாடுகளுக்கு ஏற்ப ரூ.2 ஆயிரத்து 500 முதல் ரூ.3 ஆயிரத்து 500 விலையில் கிடைக்கும். இவற்றுக்கு 30 சதவீதம் தள்ளுபடியும் உண்டு.

கல்லூரி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அணியக்கூடிய, ஜரிகை மற்றும் வண்ணக் கரையுடன் கூடிய ‘வெல்குரோ வேட்டிகள்’ ரூ.375-க்கு கிடைக்கும். வேட்டிகள் மற்றும் வேட்டிக் கரையின் வண்ணத்தில் உற்பத்தி செய்யப்பட்ட சட்டைத் துணியுடன் இணைந்த ‘வேட்டி, சட்டைத்துணி’ ரகம் ரூ.570 விலையில் கிடைக்கும். இந்த இரு ரகங்களுக்கும் 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை செயலர் க.பணீந்திரரெட்டி, கைத்தறி மற்றும் துணி நூல் துறை இயக்குநர் ச.முனியநாதன், கோ-ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குநர் தி.ந.வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x