Published : 01 Feb 2018 10:53 AM
Last Updated : 01 Feb 2018 10:53 AM

தமிழகத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களை மூட பாஜக அரசு திட்டம்: மார்க்சிஸ்ட் செயற்குழுவில் குற்றச்சாட்டு

தமிழகத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களை மூட திட்டமிட்டு மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு கூட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் செயல்பட்டு வரும் மத்திய பொதுத்துறை நிறுவனமான சேலம் உருக்காலையை மூடப்போவதாக மத்திய பாஜக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தனியாருக்கு தாரை வார்த்து வருகிறது. தமிழகத்தில் இயங்கி வரும் வாழை, கரும்பு ஆராய்ச்சி நிலையங்கள், உவர்நீர் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றை மூடப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னை ஆவடியில் 56 ஆண்டுகளாக இயங்கி வந்த ராணுவ சீருடை தயாரிப்பு ஆலையை மூடப்போவதாக மோடி அரசு அறிவித்துள்ளது. இதனால் இங்கு பணிபுரியும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்களின் குடும்பங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு எதிராக அமையும். எனவே ஆவடி ராணுவ சீருடை தயாரிப்பு ஆலையை மூடும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.

பாவலர் வரதராஜனுடன் இணைந்து பொதுவுடமை இயக்க மேடைகளில் தனது இசைப் பயணத்தை தொடங்கிய இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நாட்டின் உயரிய விருதான பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அவருக்கு மார்க்சிஸ்ட் கட்சி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x