Published : 01 Feb 2018 10:24 AM
Last Updated : 01 Feb 2018 10:24 AM

தமிழகத்தில் ஆளுநர் ஆட்சிக்கு ஒத்திகை பார்க்கிறார்கள்: நாஞ்சில் சம்பத் கருத்து

ஆளுநர் ஆட்சிக்கு இவர்கள் ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அதிமுக டி.டிவி. தினகரன் அணி கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில்சம்பத் தெரிவித்தார்.

இதுகுறித்து விருதுநகரில் அவர் அளித்த பேட்டி: போக்குவரத்துக் கட்டண உயர்வு, நாட்டு மக்களை பெரும் சுமையில் ஆழ்த்தி இருக்கிறது. போக்குவரத்துக் கட்டண உயர்வை எதிர்த்து மக்களும் மாணவர்களும் போராட வீதிக்கு வந்தபிறகு ஏதோ குறைப்பது போல அரசு பாசாங்கு செய்கிறது. சுமைகளைத் தாங்க மக்கள் கழுதை இல்லை. தனியார் பேருந்துகள் நல்ல லாபத்தில் இயங்கும்போது அரசு பேருந்துகள் மட்டும் எப்படி நஷ்டத்தில் இயங்கும் என்பதற்கு அத் துறையின் அமைச்சர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

போக்குவரத்துக் கழகத்துக்காக தினமும் 17 லட்சம் லிட்டர் டீசல் வாங்கப்படுகிறது. அதற்கான வரியையாவது அரசு குறைத்துள்ளதா?

அரசு போக்குவரத்துத்துறையை நஷ்டத்தில் ஆழ்த்தி, அதை தனியார் மயமாக்க முதல்வர் உட்பட சில அமைச்சர்கள் திட்டமிட்டுள்ளனர். அதே பெயரில், ஆயிரம் பேருந்துகளை தனியார் விலைக்கு வாங்கிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டை நான் பதிவு செய்கிறேன்.

நிர்வாகத் திறமையில்லாத அமைச்சர்களால் தமிழகம் ஏற்கெனவே தரைமட்டமாகி விட்டது. போக்குவரத்துத் துறை கண்ணுக்கு முன்பாகவே இன்று புதைந்து கொண்டிருக்கிறது. போராட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களை எவ்வித நிபந்தனையும் இன்றி விடுவிக்க வேண்டும். பேருந்து கட்டண உயர்வை அரசு திரும்பப்பெற வேண்டும். போக்குவரத்துத்துறை நஷ்டத்தில் இயங்க நிர்வாகச் சீர்கேடுதான் காரணம்.

எங்கள் அணியில் உள்ள 18 எம்.எல்.ஏ.க்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். தமிழகத்தில் ஆளுநரே குப்பையை அகற்றுகிறார். அரசியல் அமைப்புச் சட்டம் தனக்கு அளித்துள்ள கடமையைத் தாண்டி ஆளுநர் அத்துமீறுகிறார் என்றால், இங்கு கையாளாகாதவர்களின் ஆட்சி நடைபெறுகிறது என்பதற்கு இதுவே உதாரணம். ஆளுநர் ஆட்சிக்கு இவர்கள் ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் விருதுநகரையும், ராமநாதபுரத்தையும் பின்தங்கிய தொகுதியாக பாஜக அரசு கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளது. இத்தொகுதிகளை அவர்கள் குறிவைக்கிறார்கள் என்பது எங்களுக்குப் புரிகிறது. பாஜக கட்சிக்குள் உள்குத்து நடந்து கொண்டிருக்கிறது. எச்.ராஜா நாவடக்கம் இல்லாமல் வரம்பு மீறி பேசி வருகிறார். சாரணர் இயக்கத் தேர்தலில் நின்று 40 வாக்குகள் கூட இவரால் வாங்க முடியவில்லை. வைரமுத்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று சொல்வதற்கு எச்.ராஜா யார்?

தமிழ் இலக்கிய வரலாற்றில் திரையிசை பாடல்களுக்கு இலக்கியத் தகுதி வாங்கித் தந்த மகத்தான கவிஞனை திட்டமிட்டு கல்லெறிகிறார்கள்.பாசுரம் பாடிய ஆண்டாள் வைரமுத்துவை மன்னித்துவிட்டார். ஆண்டாளை அறியாதவர்கள் தமிழகத்தில் எப்படியாவது, ஒரு கலகத்தை மூட்டிக் கால் ஊன்றும் திட்டத்தின் ஒரு பகுதிதான் இந்த நாடகம்.

ரஜினி கூறும் ஆன்மிக அரசியல், பாஜகவின் இன்னொரு முகம். ஜெயலலிதா இறப்பை சர்ச்சைக்குள்ளாக்குவதே அநாகரீகம். தற்போது நியமிக்கப்பட்டுள்ள ஆறுமுகசாமி கமிஷன் யாரையோ திருப்திப்படுத்த அமைக்கப்பட்ட கமிஷன். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு நாளாகிவிட்டது.

உள்ளாட்சித் தேர்தலில் எல்லா இடங்களிலும் களம் காண்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x