Published : 01 Feb 2018 10:20 AM
Last Updated : 01 Feb 2018 10:20 AM

பொது இடங்களில் பெண்களுக்கான சிறப்பு கழிப்பறைகள்: தனியார் உதவியுடன் செயல்படுத்தும் மாநகராட்சி

பொது இடங்களில் தனியார் உதவியுடன் பெண்களுக்கான சிறப்பு கழிப்பறைகளை கட்டும் திட்டத்தை மாகநராட்சி நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது.

பஸ்நிலையம், காய்கறி சந்தைகள், கோயில்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள பொதுக் கழிப்பறைகளை பயன்படுத்துவதில் பெண்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். அதனால், தற்போது பொது இடங்களில் பெண்களுக்கான கழிப்பறைகளை கட்டும் பணியை மாநகராட்சி தொடங்கியுள்ளது.

மதுரை மாநகராட்சி 4-வது மண்டலம், 81-வது வார்டில் ஆதிமூலம் அக்ரஹாரம் பகுதியில் உள்ள கஸ்தூரிபாய் காந்தி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளின் வசதிக்காக எச்.சி.எல். நிறுவனம் மற்றும் வாஷ் நிறுவனம் இணைந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக பெண்களுக்கான சிறப்பு சுகாதார வளாகம் கட்டப்பட்டது.

மேலும், 2-வது மண்டலம் மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த காய்கறி வணிக வளாகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்தின் நிதி உதவியுடன் வாஷ் நிறுவனத்தின் மூலம் ரூ.75 ஆயிரம் மதிப்பீட்டில் பெண்களுக்கான சிறப்பு கழிப்பறை கட்டப்பட்டுள்ளது.

இந்த 2 சுகாதார வளாகங்களையும் மாநகராட்சி ஆணையர் அனீஷ் சேகர் திறந்துவைத்தார். பெண்களுக்கான சிறப்பு கழிப்பறையில் மேற்கத்திய கழிப்பறை, இந்திய முறை கழிப்பறை, நாப்கின் விநியோகிக்கும் இயந்திரம், உபயோகித்த நாப்கின்களை எரிக்கும் இயந்திரம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே, எம்.ஜி.ஆர். பஸ் நிலையம் மற்றும் ஆரப்பாளையம் பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் பெண்களுக்கான சிறப்பு கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது நகரின் மற்ற பகுதிகளிலும் தனியார் உதவியுடன் மகளிருக்கான சிறப்பு கழிப்பறைகளை கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x