Published : 01 Feb 2018 09:56 AM
Last Updated : 01 Feb 2018 09:56 AM

பட்டரைவாக்கம் ரயில் நிலையத்தில் மாணவர்கள் மோதிக்கொண்ட வழக்கில் ஒருவர் கைது: 10 மாணவர்களுக்கு போலீஸ் வலை

பட்டரைவாக்கம் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்ட வழக்கில் மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். 10 பேரை ரயில்வே போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

சென்னை காமராசர் சாலையில் உள்ள அரசு கல்லூரி மற்றும் அமைந்தகரையில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பலர், அரக்கோணம் செல்லும் ரயிலில் நேற்று முன்தினம் பயணம் செய்தனர். அவர்களில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டாக் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பயணம் செய்தனர். அவர்கள் சென்னை, அமைந்தகரையில் உள்ள கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் எனக் கூறப் படுகிறது.

பயணிகளுக்கு அச்சுறுத்தல்

ரயில் பயணிகளை அச்சுறுத்தியபடியே பயணம் செய்த அந்த மாணவர்கள் பட்டரைவாக்கம் ரயில் நிலையத்தில் இறங்கி அரசு மாணவர்களை பட்டாக் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினர். இதில் ஜெகதீஷ்வரன், தினேஷ்குமார், அஜீத் ஆகிய 3 மாணவர்கள் காயம் அடைந்தனர். இதனை பார்த்த பயணிகள் அலறி அடித்து ஓட்டம் எடுத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக பெரம்பூர் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அரசு கல்லூரி மாணவர்களை தாக்கியது தொடர்பாக அரசு உதவிபெறும் கல்லூரியில் பி.எஸ்சி. தாவரவியல் 3-ம் ஆண்டு படிக்கும், பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த மோகன்(19) என்ற மாணவரை நேற்று ரயில்வே போலீஸார் கைது செய்தனர். அதே கல்லூரியைச் சேர்ந்த மேலும் 10 மாணவர்களை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். தற்போது சென்னை- அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் உள்ள அனைத்து ரயில்கள், ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x