Published : 01 Feb 2018 09:40 AM
Last Updated : 01 Feb 2018 09:40 AM

மாநகராட்சி வெளியிட்ட ஸ்மார்ட் கைபேசி செயலி: ‘நம்ம சென்னை’யில் புகார் செய்தும் பலனில்லை - கொடுங்கையூர் எம்.ஆர்.நகரைச் சேர்ந்த பொதுமக்கள் குற்றச்சாட்டு

சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள ‘நம்ம சென்னை’ கைபேசி செயலி வழியாக புகார் தெரிவித்தால் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சென்னை மாநகராட்சி சார்பில் ‘நம்ம சென்னை’ என்ற கைபேசி செயலி கடந்த 23-ம் தேதி வெளியிடப்பட்டது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புதிய செயலியை வெளியிட்டிருந்தார்.

‘நம்ம சென்னை’ செயலி குறித்து மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்த செயலி மூலமாக பெறப்படும் புகார்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உடனுக்குடன் அனுப்பப்பட்டு, அதன்மீது மேற்கொண்ட நடவடிக்கை விவரங்களை மனுதாரருக்கு கைபேசி செயலி மூலமாகவே உடனுக்குடன் தெரிவிக்கும் வண்ணம் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்களின் குறைகள் எவ்வித காலதாமதமின்றி உடனடியாக நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த செயலியில் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுப்பதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக தண்டையார்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட கொடுங்கையூர் எம்.ஆர்.நகரைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:

‘ஸ்வச்சத்தா’ செயலி

இப்பகுதியில் 3 நாட்களாக குப்பைகள் அகற்றப்படவில்லை. அது குறித்து ‘நம்ம சென்னை’ செயலியில் புகார் செய்யப்பட்டுள்ளது. புகார் தெரிவித்து 24 மணி நேரம் கழித்துகூட, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனைத் தொடர்ந்து 4-வது நாள், மத்திய அரசின் ‘ஸ்வச்சத்தா’ செயலியில் புகார் தெரிவித்த நிலையில் அடுத்த ஒரு மணி நேரத்தில் மாநகராட்சி ஊழியர்கள் வந்து குப்பைகளை அகற்றினர். இதனால் அமைச்சர் வெளியிட்ட ‘நம்ம சென்னை’ செயலி மீது பொதுமக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

‘ஸ்வச்சத்தா’ செயலியில் அசுத்தம் தொடர்பாக மட்டுமே புகார் தெரிவிக்க முடியும். அதே நேரத்தில் ‘நம்ம சென்னை’ செயலியில் தெருவிளக்கு பராமரிப்பு, குப்பை அகற்றுதல், நாய் தொல்லை, சாலைப்பணிகள் பராமரிப்பு, மழைநீர் வடிகால் பராமரிப்பு என பல்வேறு புகார்களை தெரிவிக்க முடியும்.

அதிருப்தியில் மக்கள்

ஆனால் ‘நம்ம சென்னை’ செயலியில் பொதுமக்கள் தங்கள் முகவரியை பதிவிடுவதில் சிக்கல்கள் உள்ளன. நாமாக தட்டச்சு செய்யும் முகவரிகள் மற்றும் புகார்கள், மாநகராட்சி அதிகாரிகளுக்கு சென்றடைவதிலும் தொழில்நுட்ப பிரச்சினைகள் உள்ளன. ‘ஸ்வச்சத்தா’ செயலியில், புகார் தொடர்பாக படம் எடுக்கும் இடத்தின் முகவரி தானாகவே பதிவாகும் வசதி உள்ளது. அவ்வாறு ‘நம்ம சென்னை’ செயலியில் இல்லை. ஏற்கெனவே அமலில் உள்ள செயலியில் உள்ள அம்சங்கள் கூட புதிதாக வெளியிடப்பட்டுள்ள ‘நம்ம சென்னை’ செயலியில் இடம் பெறாதது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘நம்ம சென்னை’ செயலியை சோதனை அடிப்படையில்தான் வெளியிட்டிருக்கிறோம். அது தொடர்பாக வரும் கருத்துகள் அடிப்படையில் அந்த செயலி மேம்படுத்தப்படும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x