Published : 01 Feb 2018 09:25 AM
Last Updated : 01 Feb 2018 09:25 AM

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்பாளர்களைவிட ரூ.2 கோடி கூடுதலாக செலவழித்த தேர்தல் ஆணையம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட 59 வேட்பாளர்கள் அளித்த கணக்குப்படி மொத்தமாக ரூ.1.02 கோடி மட்டுமே செலவழித்துள்ளனர். ஆனால், இந்தத் தேர்தலை நடத்தி முடிக்க ரூ.3.02 கோடியை தேர்தல் ஆணையம் செலவழித்தது தெரியவந்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு மறைந்தார். இதையடுத்து அவர் போட்டியிட்டு வென்ற, ஆர்.கே.நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் நடத்துவதாக இருந்தது. ஆனால், வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. வருமானவரித் துறையினர் நடத்திய சோதனையில் பல ஆவணங்கள் பிடிபட்டன. இதையடுத்து, தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

அதன்பின், கடந்த டிசம்பர் 21-ம் தேதி ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இத்தேர்தலில் அதிமுக சார்பில் இ.மதுசூதனன், திமுக சார்பில் என்.மருதுகணேஷ், சுயேச்சையாக டிடிவி தினகரன் உள்ளிட்ட 59 பேர் போட்டியிட்டனர். இதில், தினகரன் வெற்றி பெற்றார்.

இந்தத் தேர்தலில் பணப் பட்டுவாடாவை தடுக்க பல்வேறு முயற்சிகளை தேர்தல் ஆணையம் எடுத்தது. செலவினம், காவல்துறை மற்றும் பொதுப்பார்வையாளர்கள் என 9 பேர் பணியாற்றினர். இதுதவிர, 15 கம்பெனி துணை ராணுவப்படையினர் வரவழைக்கப்பட்டனர். வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா, முக்கிய தெருக்களில் கண்காணிப்பு கேமரா என பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆணையம் மேற்கொண்டது. பிரச்சாரத்தின்போதே, செலவின பார்வையாளர்கள் வேட்பாளர்களின் செலவுகளை வீடியோ பதிவு செய்து, அவற்றுக்கான நிழல் கணக்கை தயாரித்தனர்.

தேர்தல் ஆணையத்தின் விதிகள்படி, வாக்கு எண்ணிக்கையில் இருந்து 30 நாட்களுக்குள் இறுதி செலவுக்கணக்கை வேட்பாளர்கள் தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி, அனைவரும் தாக்கல் செய்து, அந்த கணக்குகளும் தற்போது தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, ஒட்டுமொத்தமாக 59 வேட்பாளர்களும் சேர்த்து ரூ.1 கோடியே 2 லட்சத்து 70 ஆயிரத்து 939 மட்டுமே செலவழித்துள்ளனர். ஆனால், இந்த தேர்தலை நடத்திய தேர்தல் ஆணையத்தின் செலவோ அதை விட அதிகம்.

இது தொடர்பாக தேர்தல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

வழக்கமாக ஒரு இடைத்தேர்தலுக்கு ரூ.65 முதல் ரூ.70 லட்சம் வரை செலவழிக்கப்படும். ஆனால், தேர்தல் ஆணையம் ஆர்.கே.நகர் தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை இவற்றுக்காக ரூ.3 கோடியே 2 லட்சத்து 64 ஆயிரத்து 386 செலவழித்துள்ளது. தேர்தலின்போது ரூ.27 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்தப் பணத்தை உரிய ஆவணங்களை காட்டி சம்பந்தப்பட்டவர்கள் திருப்பி பெற்றுக் கொண்டனர்.

தேர்தலில் வேட்பாளர்கள் செலவுக்கணக்கை தாக்கல் செய்து, அவை பார்வையாளர்களால் சரிபார்க்கப்பட்டு, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் யாருமே ரூ.28 லட்சத்தை தாண்டி செலவழிக்கவில்லை. இருப்பினும், யாரேனும் ஒரு வேட்பாளர் அதிகளவில் செலவழித்து, அதை கணக்கில் காட்டாமல் விட்டிருந்தால், அதற்கான ஆவணங்கள் கிடைக்கும் பட்சத்தில் அந்த வேட்பாளர் தகுதிநீக்கம் செய்யப்படுவார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x