Published : 01 Feb 2018 09:22 AM
Last Updated : 01 Feb 2018 09:22 AM

பெண் குழந்தையை கடத்தி கொன்ற வழக்கில் இளைஞருக்கு தூக்கு தண்டனை: திருவண்ணாமலை மகளிர் நீதிமன்றம் உத்தரவு

பணத்துக்காக குழந்தையை கடத்திச் சென்று கொலை செய்த வழக்கில், இளைஞருக்கு தூக்கு தண்டனை விதித்து திருவண்ணாமலை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அடுத்த மேல்பானாந்தல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பரமசிவம். இவரது மகள் பச்சையம்மாள்(4). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வந்தார். கடந்த 2013 ஜூன் 10-ம் தேதி பள்ளிக்குச் சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து மங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து குழந்தையை தேடினர். ஜூன் 19-ம் தேதி அதே கிராமத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவருக்குச் சொந்தமான விவசாய கிணற்றில் பச்சையம்மாள் சடலமாக மீட்கப்பட்டார்.

போலீஸ் விசாரணையில், மேல்பானாந்தல் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன்(28) என்பவர் பச்சையம்மாளை பள்ளியில் இருந்து கடைசியாக அழைத்துச் சென்றது தெரியவந்தது. தலைமறைவான அவரை, ஜூன் 22-ம் தேதி போலீஸார் கைது செய்தனர்.

பரமசிவத்திடம் வாங்கிய ரூ.5 லட்சம் பணத்தை அவர் திரும்பக் கேட்டு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததால், அவரது குழந்தையை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்ட மணிகண்டன் போலீஸுக்கு பயந்து குழந்தையை கொலை செய்து கிணற்றில் வீசியது தெரியவந்தது.

இந்த வழக்கின் விசாரணை திருவண்ணாமலை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி மகிழேந்தி முன்னிலையில் நடந்தது. விசாரணையின் முடிவில், குழந்தையை கொலை செய்ததற்காக தூக்கு தண்டனையும், கடத்தியதற்காக ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி மகிழேந்தி தீர்ப்பளித்தார். அபராதத் தொகையை கட்டத் தவறினால் மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இவ்வழக்கில், அரசு தரப்பில் வழக்கறிஞர் அர்ச்சனா ஆஜரானார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x