Published : 01 Feb 2018 09:20 AM
Last Updated : 01 Feb 2018 09:20 AM

வேண்டியவர்களுக்கு உயர் பதவி வழங்குவதற்காக பிற அதிகாரிகள் மீது குற்றம்சாட்டுவது தவறு: உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

தங்களுக்கு வேண்டியவர்களை உயர் பதவியில் நியமிப்பதற்காக, அப்பதவிக்கான போட்டியில் உள்ள பிற அதிகாரிகள் மீது குற்றம்சாட்டும் நடைமுறையைக் கைவிட வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

தமிழக மருத்துவக் கல்வி இயக்குநராக டாக்டர் எட்வின்ஜோ நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ரேவதி கயிலைராஜன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், எட்வின்ஜோ நியமனத்தை ரத்து செய்து, தகுதி அடிப்படையில் மருத்துவக் கல்வி இயக்குநரை நியமிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து மருத்துவக் கல்வி இயக்குநர் பொறுப்பில் இருந்து எட்வின் ஜோ நீக்கப்பட்டார். அப்பொறுப்பை, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் நாராயணபாபு கூடுதல் பணியாக மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், மருத்துவக் கல்வி இயக்குநராக தன்னை நியமனம் செய்வது தொடர்பான உத்தரவை 6 வாரத்தில் அமல்படுத்தாததால் சுகாதாரத் துறை செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் ரேவதி கயிலைராஜன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், ஆர்.தாரணி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி டீன் மீனாட்சி சுந்தரம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மருத்துவக் கல்வி இயக்குநர் பதவிக்கு மீனாட்சி சுந்தரம் பெயரையும் பரிசீலிக்க வேண்டும் என்றார்.

அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் புகழேந்தி, ‘டாக்டர் மீனாட்சி சுந்தரத்தின் மீது குற்றச்சாட்டு குறிப்பாணை நிலுவையில் உள்ளது. இதனால், அவரது பெயரை பரிசீலிக்க முடியாது’ என்றார்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த நீதிபதிகள், ‘அரசு தங்களுக்கு வேண்டியவர்களுக்கு பதவி வழங்க, அந்தப் பதவிக்கு தகுதியான பிற நபர்கள் மீது மோசடியாக குற்றச்சாட்டுகளை கூறுவது வழக்கமாகி உள்ளது. இது தவறு. தகுதி, திறமை உள்ளவர்கள் உயர் பொறுப்புகளில் நியமிக்கப்பட வேண்டும்’ என்றனர்.

ரேவதி கயிலைராஜன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘நீங்கள் எப்படி ஓய்வு பெறப் போகிறீர்கள் என்பதை பார்க்கிறோம் என அதிகாரிகள் இப்போதுகூட மிரட்டி உள்ளனர். ஓய்வுக்கு முன்தினம் அவரை பணியிடை நீக்கம் செய்ய வாய்ப்பு இருக்கிறது’ என்று அச்சம் தெரிவித்தார். இதை நீதிபதிகள் பதிவுசெய்து கொண்டனர்.

பின்னர், ‘இயக்குநர் நியமனம் தொடர்பாக பரிசீலனை நடைபெற்று வருவதாகவும், 2 நாளில் முடிவெடுப்பதாகவும்’ கூடுதல் அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார். இதையடுத்து விசாரணையை நாளைக்கு (பிப்.2) நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x