Published : 01 Feb 2018 09:20 AM
Last Updated : 01 Feb 2018 09:20 AM

பரங்கிமலை – ஷெனாய்நகர் இடையே இனி 7 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கம்

பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் பரங்கிமலை – ஷெனாய்நகர் இடையே அலுவலக நேரங்களில் 7 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கவுள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

சென்னையில் தற்போது, விமான நிலையம் – நேரு பூங்கா, பரங்கிமலை – நேரு பூங்கா, சின்னமலை – ஆலந்தூர் - விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில்கள் தினமும் இயக்கப்பட்டு வருகின்றன. 15 நிமிடங்கள் இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.

புதிய நடவடிக்கை

சென்னையில் மாநகர பஸ் கட்டண உயர்வுக்குப் பிறகு, மெட்ரோ ரயில்களில் 20 முதல் 30 சதவீதம் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே, மெட்ரோ ரயில் பயணத்துக்கு மக்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு புதிய நடவடிக்கைகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் எடுத்து வருகிறது. அதன்படி, இன்று முதல் (பிப்.1) புதிய கால அட்டவணையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

நேரு பூங்கா – விமான நிலையம் இடையே அலுவலக நாட்களில் முதல் மெட்ரோ ரயில் 5.54 மணிக்கும், கடைசி மெட்ரோ ரயில் இரவு 9.54 மணிக்கும் இயக்கப்படும். அதுபோல், விமான நிலையத்தில் இருந்து முதல் மெட்ரோ ரயில் காலை 6.05 மணிக்கும், கடைசி மெட்ரோ ரயில் 9.55 மணிக்கு இயக்கப்படும். ஒவ்வொரு 20 நிமிடங்கள் இடைவெளியிலும் ஒரு மெட்ரோ ரயில்சேவை இருக்கும்.

விமான நிலையம் - சின்னமலை இடையே முதல் ரயில் காலை 5.55 மணிக்கும், கடைசி ரயில் இரவு 10 மணிக்கும் இயக்கப்படும். சின்னமலை – விமான நிலையம் இடையே முதல் ரயில் காலை 5.51 மணிக்கும், கடைசி ரயில் இரவு 9.51 மணிக்கும் இயக்கப்படும். ஒவ்வொரு 20 நிமிடங்கள் இடைவெளியிலும் ஒரு மெட்ரோ ரயில்சேவை இருக்கும்.

கூட்டம் அதிகரிப்பு

இது தொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறும்போது, ‘‘சென்னையில் விமான நிலையம் – நேரு பூங்கா, பரங்கிமலை – நேரு பூங்கா, சின்னமலை – ஆலந்தூர் - விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில்கள் தினமும் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், ஷெனாய்நகர் - பரங்கிமலை இடையே பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அலுவலக நாட்களில் (திங்கள் – சனி) கூட்டம் மேலும் அதிகரிப்பது நாங்கள் நடத்திய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

எனவே, தற்போது உள்ளதைக் காட்டிலும் 36 சர்வீஸ்களை அதிகரிக்க உள்ளோம். அதன்படி, காலை, மாலை அலுவலக நேரங்களில் 15 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் சேவை என்பதற்கு பதிலாக இனி 7 நிமிடங்களுக்கு ஒரு ரயில் சேவை தொடங்கவுள்ளோம். காலை 8.30 முதல் 10.30 மணி வரையிலும், மாலையில் 5 முதல் இரவு 8.30 மணி வரையில் இந்த சேவை இருக்கும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x