Published : 01 Feb 2018 09:16 AM
Last Updated : 01 Feb 2018 09:16 AM

ராணுவ உடைகளை உற்பத்தி செய்யும் ஆவடி தொழிற்சாலையை மூட மாட்டோம்: பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி

சென்னை ஆவடியில் உள்ள ராணுவ உடை உற்பத்தி தொழிற்சாலை மூடப்படாது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக ராமநாதபுரத்தில் ஆய்வு செய்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாட்டின் மிகவும் பின்தங்கியுள்ள ராமநாதபுரம் உள்ளிட்ட 115 மாவட்டங்களில் வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு, ‘மறுமலர்ச்சி மாவட்டங்களாக’ மாற்ற வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்த மாவட்டங்களை மத்திய அமைச்சர்கள் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று பிரதமர் தெரிவித்தார்.

அதன்படி, ஆய்வுப் பணியை மேற்கொண்டு வருகிறோம். இம்மாவட்டங்களில் 2022-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

வாலிநோக்கத்தில் தளம் இல்லை

ராமநாதபுரம் மட்டுமின்றி நாடு முழுவதும் தேசிய உற்பத்தி பொருளாதார மண்டலம் அமைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. சென்னை ஆவடியில் உள்ள ராணுவ உடை உற்பத்தி தொழிற்சாலை மூடப்படாது. இதுதொடர்பாக சில ஊடகங்களில் தவறான செய்திகள் வெளியாகியுள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கத்தில் கடற்படை விமானத் தளமோ, ஆயுதக்கிடங்கோ அமைப்பது குறித்த திட்டம் ஏதும் இல்லை.

நான் உறுதியளிக்கவில்லை

நடுக்கடலில் சுட்டுக்கொல்லப்பட்ட தங்கச்சிமடம் மீனவர் பிரிட்ஜோவின் குடும்பத்தினருக்கு அரசு வேலை தருகிறோம் என நான் கூறவில்லை. மனிதாபிமான அடிப்படையில் பிரிட்ஜோவின் சகோதரருக்கு எனது முயற்சியில் உள்ளூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கிக் கொடுத்தேன். அந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

இலங்கை துறைமுக சர்ச்சை

ஹம்பன்தோட்டா துறைமுகம் அமைத்தது தொடர்பாக பெறப்பட்ட கடனை இலங்கை அரசால் திருப்பிச் செலுத்த முடியாததால், அந்த துறைமுகத்தை சீனாவுக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு கொடுத்துள்ளது. அந்த இடத்தை சீனா துறைமுகப் பணிக்கு மட்டும்தான் பயன்படுத்துமா என்பது சந்தேகமே. மற்றவை குறித்து நான் கூற விரும்பவில்லை என்று அவர் கூறினார்.

அப்போது, தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் எம்.மணிகண்டன், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன், எம்.பி. அன்வர் ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x