Published : 01 Feb 2018 08:19 AM
Last Updated : 01 Feb 2018 08:19 AM

மின்வாரிய ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம்: அமைச்சர் தங்கமணி தகவல்

மின்வாரிய ஊழியர்களுக்கு ரூ.2,500-ம், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ரூ.1,250-ம் இடைக்கால நிவாரணமாக வழங்கப்படும் என மின்துறை அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் அமைச்சர் தங்கமணி கூறியதாவது:

ஊதிய உயர்வு தொடர்பாக நேற்று சிஐடியு தவிர மற்ற அனைத்து மின்வாரிய தொழிற்சங்கங்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினோம். அப்போது, ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. இதையடுத்து, முதற்கட்டமாக இடைக்கால நிவாரணம் வழங்குவது என அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, தற்போது பணியில் உள்ள ஊழியர்களுக்கு கடந்த அக்டோபர் முதல் ஜனவரி வரையிலான 4 மாதங்களுக்கு ரூ.2,500 வீதம் ரூ.10 ஆயிரமும், ஓய்வு பெற்ற மின் ஊழியர்களுக்கு ரூ.1,250 வீதம் 4 மாதங்களுக்கு ரூ.5 ஆயிரமும் இடைக்கால நிவாரணம் வழங்கப்படும். முதல்வரின் ஒப்புதலை பெற்று இன்னும் ஓரிரு நாட்களில் இத்தொகை வழங்கப்படும். இதற்காக, அரசுக்கு கூடுதலாக ரூ.136 கோடி செலவாகும்.

உடன்குடி 2-ம் கட்ட மின்திட்டத்தின் கீழ், 1,320 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யப்பட உள்ளது. மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் அதற்கான அடிக்கல் நாட்டப்படும். அதேபோல், சூரியசக்தி மூலம் ஆயிரம் மெகாவாட் மின்னுற்பத்தி செய்வதற்காக விரைவில் டெண்டர் விடப்படும்.

நிலக்கரி இறக்குமதியில் ஊழல் நடந்துள்ளதாக கூறப்படுவது பொய்யான குற்றச்சாட்டு. இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னர்தான் அவை இறக்குமதி செய்யப்படுகின்றன. எனவே, நிலக்கரி இறக்குமதியில் ஊழல் நடந்துள்ளது என கூறுவது தவறான தகவல். தமிழகம் தற்போது மின்மிகை மாநிலமாக உள்ளது. வரும் கோடையில் மின்வெட்டு ஏற்படுவதற்கான வாய்ப்பே கிடையாது.

இவ்வாறு தங்கமணி கூறினார்.

மின்கட்டணம் உயருமா?

முன்னதாக, செய்தியாளர்கள் அவரிடம், “போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டதையடுத்து, பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதுபோல் மின்வாரிய தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்ட பிறகு மின்கட்டணம் உயர்த்தப்படுமா?” என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த தங்கமணி, “பேருந்துக் கட்டணம் கடந்த 7 ஆண்டுகளாக உயர்த்தப்படாததால் அவை உயர்த்தப்பட்டது. ஊதிய உயர்வுக்கும், அதற்கும் சம்பந்தம் இல்லை. அதேபோல், மின்கட்டணம் உயர்த்தப்படும் என யூகத்தின் அடிப்படையில் கூறப்படுகிறது. மின்கட்டணம் உயர்த்தும் எண்ணம் ஏதும் அரசுக்கு தற்போது இல்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x