Published : 01 Feb 2018 07:56 AM
Last Updated : 01 Feb 2018 07:56 AM

கட்சிப் பணிகள், நிர்வாகிகளின் செயல்பாடுகள் தொடர்பாக மாவட்ட வாரியாக இன்று முதல் ஸ்டாலின் ஆய்வு

கட்சிப் பணிகள், நிர்வாகிகளின் செயல்பாடுகள் தொடர்பாக மாவட்ட வாரியான ஆய்வுக் கூட்டத்தை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்குகிறார். முதல் நாளில் கோவை மாநகர் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக டெபாசிட் இழந்ததைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கட்சிப் பணிகளை ஆய்வு செய்ய ஸ்டாலின் முடிவு செய்தார். திமுகவின் ஊராட்சி செயலாளர்கள் முதல் மாவட்டச் செயலாளர்கள் வரை அனைவரிடமும் மாவட்ட வாரியாக கலந்துரையாட அவர் திட்டமிட்டுள்ளார்.

அதன்படி, இன்று (பிப்ரவரி 1) தொடங்கி மார்ச் 22-ம் தேதி வரை 32 நாட்களுக்கு மாவட்ட வாரியாக ஆய்வுக் கூட்டம் நடக்கவுள்ளது. இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில், ‘சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் மாவட்ட வாரியாக திமுக ஊராட்சி செயலாளர் முதல் மாவட்டச் செயலாளர் வரையிலான நிர்வாகிகள், துணை அமைப்புகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களை பிப்ரவரி 1 முதல் மார்ச் 22-ம் தேதி வரை ஸ்டாலின் சந்தித்து ஆய்வு நடத்த உள்ளார். இதில் திமுக நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்’ என கேட்டுக் கொண்டுள்ளார்.

முதல்கட்டமாக இன்று காலை கோவை மாநகர் வடக்கு, மாநகர் தெற்கு மாவட்ட நிர்வாகிகளையும், மாலையில் நீலகிரி மாவட்ட நிர்வாகிகளையும் ஸ்டாலின் சந்தித்துப் பேசுகிறார். அப்போது கட்சிப் பணிகள், எம்.பி., எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர் கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளின் செயல்பாடுகள், புகார்கள் குறித்து கேட்டறிய உள்ளார்.

புகார் பெட்டி

ஆய்வுக் கூட்டத்துக்கு வரும் நிர்வாகிகள் எவ்வித தயக்கமும் இன்றி புகார்களை தெரிவிக்க வசதியாக அண்ணா அறிவாலயத்தில் புகார் பெட்டி வைக்கப்பட உள்ளது. இதில் தங்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் புகார்கள், ஆலோசனைகளை ஆதாரங்களுடன் தெரிவிக்கலாம் என்றும், அவற்றை படித்து தனது கவனத்துக்கு கொண்டுவர தனியாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x