Published : 19 Jan 2018 07:19 PM
Last Updated : 19 Jan 2018 07:19 PM

திருப்பதி சர்ச்சைப் பேச்சு; திமுக எம்.பி. கனிமொழி மீது வழக்குப் பதிவு: கரீம் நகர் போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு

திருப்பதி கோயில் உண்டியல் போலீஸ் பாதுகாப்பை கடவுள் நம்பிக்கையுடன் இணைத்துப் பேசிய கனிமொழி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர போலீஸாருக்கு கரீம் நகர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சியில் சமீபத்தில் திக சார்பில் உலக நாத்திக மாநாடு நடந்தது. இதில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி பங்கேற்றுப் பேசினார். திருப்பதி கோயில் நிர்வாகம் குறித்தும், அதன் பராமரிப்பு குறித்தும் புகழ்ந்து பேசிய அவர் கடவுள் மீது பக்தர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை குறித்து கேள்வி எழுப்பினார்.

அப்போது கனிமொழி பேசுகையில், ''உள்துறை விவகாரக் குழு சார்பில் திருப்பதி கோயிலுக்கு துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடுவுடன், நான் உள்ளிட்ட பல எம்.பி.க்கள் சென்று இருந்தோம். திருப்பதி கோயில் நிர்வாகம் மிகச் சிறப்பாக கோயிலைப் பராமரித்து வருகிறது. நிர்வாகத்தை மிகவும் கட்டுக்கோப்பாக நடத்தி வருகிறது. அந்த கோயில் நிர்வாகத்திடம் இருந்து நாம் பல விஷயங்களை கற்க வேண்டியது அவசியம்.

அதேசமயம், நாங்கள் எம்.பி.க்கள் என்பதால், சிறப்பு தரிசனத்துக்கு வழி செய்யப்பட்டது. இறைவன் முன் அனைவரும் சமம் என்று கூறுவது எல்லாம் பொய்யா? நீங்கள் அதிகமாக பணம் கொடுத்து டிக்கெட் வாங்கினால், விரைவாக இறைவனை தரிசனம் செய்ய முடியும். இல்லாவிட்டால், 10 மணி நேரம் முதல் 2 நாட்கள்வரை காத்திருக்க வேண்டும்.

கோயிலில் இறைவனுக்கு முன் இருக்கும் உண்டியல் அருகே எப்போதும் ஆயுதம் ஏந்திய பாதுகாப்புப் படையினர் இருக்கிறார்கள். உண்மையில் கடவுள் இருக்கிறார் என்றால், அவரே உண்டியலை பாதுகாப்பாரே? ஏன் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு அளிக்கிறார்கள்?. கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் உண்மையில் கடவுளை நம்புகிறார்களா?'' எனப் பேசி இருந்தார்.

கனிமொழியின் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராமகோபாலன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்து முன்னணி அமைப்பினர் சென்னை காவல் ஆணையரிடம் திமுக எம்.பி. கனிமொழி மீது புகார் அளித்திருந்தனர்.

ஆந்திராவில் கனிமொழி பேச்சுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. ஆந்திர ஊடகங்கள் கடுமையாக விமர்சனம் செய்து விவாதப் பொருளாக்கின. இதற்கிடையே ஹைதராபாத்தில் உள்ள சயீதாபாத் நகர் காவல் நிலையத்தில் கருணா சாகர் என்ற வழக்கறிஞர் திருச்சி பேச்சு பற்றி புகார் அளித்து, கனிமொழி மீது நடவடிக்கை எடுக்க கேட்டிருந்தார்.

கனிமொழி மீதான புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கும் முன், சட்டபூர்வ ஆலோசனை நடத்துவோம் என ஹைதராபாத் போலீஸார் தரப்பில் கூறப்பட்டிருந்தது.

கனிமொழி மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி தெலங்கானா மாவட்ட நீதிமன்றத்தில் கரீம்நகர் பாஜக மாவட்ட தலைவர் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. இதன் மீதான விசாரணையில் கனிமொழி மீது வழக்குப் பதிவு செய்ய செய்ய தெலங்கானா கரீம்நகர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருப்பதி கோயில் குறித்த விமர்சனம் செய்த்தாக கரீம் நகர் நீதிமன்றம் கனிமொழி மீது 153a, 504, 505, 298, 295 A ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய கரிம் நகர் போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x