Published : 06 Jan 2018 08:49 PM
Last Updated : 06 Jan 2018 08:49 PM

பயணிகளை நடுவழியில் இறக்கி விட்ட ஊழியர்களிடம் இழப்பீடு கேட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு

முன்னறிவிப்பின்றி வேலைநிறுத்த போராட்டாத்தின்போது நடுவழியில் இறக்கிவிடப்பட்டதால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டபோது பயணிகளை நடுவழியில் இறக்கிவிட்ட போக்குவரத்து ஊழியர்களை சஸ்பெண்ட் செய்யக்கோரியும் இழப்பீட்டை பெற்றுத்தரக்கோரியும் வழக்கறிஞர் பிரீத்தா என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கை நியாயமானதாக இருந்தாலும், பாதி வழியில் பயணிகளை இறக்கிவிட்டது தவறு என்றும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்த அவர்களுக்கு எவ்வித உரிமையும் இல்லையென அவரது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

போக்குவரத்து துறை மேம்பாட்டுக்காக எந்த குரலையும் எழுப்பாதவர்கள், இப்போது போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது எஸ்மா சட்டத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டுமென மனுவில் கோரியுள்ளார்.

முறையாக பயணச்சீட்டு எடுத்தும் உரிய இடத்திற்கு கொண்டு சேர்க்காமல் நடுவழியில் இறக்கிவிட்டதால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உரிய இழப்பீட்டை நிர்ணயித்து, அந்த தொகையை சம்பந்தப்பட்ட ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்து கொடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்து பதிவுமூப்பு அடிப்படையில் உள்ள ஓட்டுநர், நடத்துனர்களை பணியமர்த்த தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இதற்கிடையில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரக்கோரி சென்னை திருமுல்லைவாயிலை சேர்ந்த வழக்கறிஞர் சந்தோஷ்குமார் என்பவரும் மனுத் தாக்கல் செய்துள்ளார். வேலை நிறுத்த சங்கங்களின் மீது சட்டபடியான நடவடிக்கை எடுக்க மத்திய மாநில அரசுகள், தமிழக டிஜிபி-க்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

இந்த இரண்டு மனுக்களும் ஏற்கனவே போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக நடைபெற்று வரும் வழக்குகளுடன் சேர்ந்து முறையிடப்படும் என தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x