Published : 06 Jan 2018 05:12 PM
Last Updated : 06 Jan 2018 05:12 PM

கார்பரேட் நிறுவனங்கள் கையில் ஜல்லிக்கட்டு: அழிவில் தான் முடியும்: வேல்முருகன் கண்டனம்

சென்னையில் ஜல்லிக்கட்டு என்பதன் பின்னே ஒளிந்திருக்கும் கார்ப்பரேட்டுகளுக்கு, ஜல்லிக்கட்டுக் காவலர்களே ஏவலர்களானது போராடி பெற்ற ஜல்லிக்கட்டு உரிமையை அழித்துவிடும் என்று வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாரம்பரிய ஜல்லிக்கட்டு மக்களின் கையிலிருந்து பணம் பண்ணும் நோக்குடன் கார்பரேட்டுகளின் கைகளுக்கு மாறியுள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அரசு சார்பில் நடக்காமல் கார்பரேட் கம்பெனியின் பெயரால் நடக்கும் ஜல்லிக்கட்டு, வியாபார நோக்கில் போய் முடிவதால் பாரம்பரியம் அழிக்கப்படும் நிலை வரும்

இது குறித்து தமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கை:

“நாட்டு மாட்டினத்தை “அழித்தொழிக்கும்” நோக்கில் ஜல்லிக்கட்டைக் குறிவைத்து அது கைகூடாத நிலையில் இன்று“அடுத்துக்கெடுக்கும்” உத்தியைக் கையில் எடுத்திருக்கிறார்கள்!

“பூர்விகா ஜல்லிக்கட்டு சென்னையில்” என்பதன் பின்னே ஒளிந்திருக்கும் கார்ப்பொரேட்டுகளுக்கு, ஜல்லிக்கட்டுக் காவலர்களே ஏவலர்களானது எப்படி என்பதுதான் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கேள்வி?

“பகையாளியை உறவாடிக் கெடுப்பது” என்பது இலக்கை எட்டுவதற்கான இன்னொரு வழிமுறை. அத்தகைய ஓர் உத்தியைத்தான் இப்போது கையில் எடுத்திருக்கின்றன பீட்டா,புளூ கிராஸ், பீப்பிள் ஃபார் அனிமல்ஸ், இந்திய விலங்குகள் நல வாரியம் முதலிய ஜல்லிக்கட்டு எதிர்ப்பாளர்கள்.

இவை அனைத்துமே அமெரிக்க ஆதரவு அமைப்புகள்; “சந்தை மற்றும் நுகர்வு” எனும் கார்ப்பொரேட் நாகரிகத்தின் கையாட்கள். விலங்குகளுக்கு எதிரான வன்முறையை எதிர்ப்பதாகச் சொல்லி பணம்பார்ப்பதுதான் இவர்களது தொழில்.

ஆனால் இவர்கள் சொல்லும் வன்முறையே இவர்களது சந்தை-நுகர்வு நாகரிகம்தான் என்பதை மறுக்க முடியுமா? உயிரின உணவுச் சங்கிலியில் ஒன்றுக்கொன்று இரையாவதே இயற்கை நியதி! இந்த வாழ்வியல் நாகரிகத்தில் வன்முறைக்குத் தனியே பொருளேது?

வன்முறைதான் நாகரிகம்; நாகரிகம்தான் வன்முறை; இரண்டும் ஒன்றுதான்!

ஆனால் பணம் பண்ணும் எண்ணத்தில் தான் எதையும் பார்க்கும் இந்த கார்ப்பொரேட் கையாட்கள், ஜல்லிக்கட்டை எதிர்க்க முடியாத பட்சத்தில் அதனுடன் கைகுலுக்குவது போல் பாவனை செய்கின்றனர். அதனால்தான் பூர்விகா ஜல்லிக்கட்டு சென்னையில்! கோவை, மதுரை மாநகர்களிலும் நடத்தத் திட்டமாம்.

தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவையும் சென்னை ஜல்லிக்கட்டு அமைப்பும் இணைந்து தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் டாக்டர் பி. ராஜசேகர் முன்னிலையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளத்தில் ஜனவரி 18ந் தேதியன்று ஜல்லிக்கட்டு நடத்தவிருக்கிறார்கள். இந்த ஜல்லிக்கட்டை “நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ்” நிறுவனம் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்திருக்கின்றது. அதுதான் “பூர்விகா ஜல்லிக்கட்டு சென்னையில்”!

இதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுமார் 500காளைகளும் நூற்றுக்கணக்கில் மாடுபிடி வீரர்களும் வரவிருக்கின்றனர். நிகழ்ச்சியை பல்லாயிரக்கணக்கானோர் பார்க்கக்கூடிய வகையில் பாதுகாப்புடன் கூடிய அரங்கமும் அமைக்கப்படும்.

ஜல்லிக்கட்டில் பங்குபெறும் மாடுகளை ஐந்து அணிகளாகப் பிரித்து ஐந்து சுற்றுகளாக போட்டி நடத்தப்பட்டு வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த மாபெரும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி மாட்டு பொங்கல் நாளன்று ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும்.

நிகழ்ச்சிக்கு பொருளுதவி: பூர்விகா மொபைல்ஸ், அணில் உணவுகள் மற்றும் சூரியன் எஃப்எம் நிறுவனங்கள்.

ஆனால் இந்த நிகழ்ச்சியை ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். இது ஜல்லிக்கட்டை அழித்தொழிக்க கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் பீட்டாவின் வேலையை எளிதாக்கிவிடும்; எனவே மரபார்ந்த முறையிலேயே ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும்; வணிகத்திற்கு அதில் இடமில்லை என்கின்றனர்.

பணம் பண்ணவே ஜல்லிக்கட்டை நடத்துகிறார்கள் என்பதும் பீட்டாவின் ஒரு குற்றச்சாட்டு. ஆக “பூர்விகா ஜல்லிக்கட்டு சென்னையில்” பீட்டாவின் வாதத்திற்கு வலு சேர்த்துவிடக்கூடும்.

போராடி மீட்டெடுத்த ஜல்லிக்கட்டை பேணிப் பாதுகாக்க ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் முன்வைக்கும் நியாயமான வாதங்களுடன் முற்றிலுமாக உடன்படுகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

தொன்மைத் தமிழ் மரபென்பது வேளாண் வழிப்பட்டதேயாகும். முற்றாக அது அழிந்துவிடவில்லை என்பதை உலகிற்குப் பறைசாற்றுவதுதான் நமது மாட்டினமும் ஜல்லிக்கட்டும்.

ஆனால் நம் நாட்டு மாட்டினத்தை “அழித்தொழிக்கும்” நோக்கில் ஜல்லிக்கட்டைக் குறிவைத்து அது கைகூடாத நிலையில் இன்று“அடுத்துக்கெடுக்கும்” உத்தியாகத்தான் வணிக நிறுவனங்கள் ஜல்லிக்கட்டை வெறும் காட்சிப் பொருளாக்கப் பார்க்கின்றன.

எனவேதான் “பூர்விகா ஜல்லிக்கட்டு சென்னையில்” என்பதன் பின்னே ஒளிந்திருக்கும் கார்ப்பொரேட்டுகளுக்கு, ஜல்லிக்கட்டுக் காவலர்களே ஏவலர்களானது எப்படி என்று கேள்வி எழுப்புகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x