Published : 06 Jan 2018 03:36 PM
Last Updated : 06 Jan 2018 03:36 PM

கமல்ஹாசனுக்கு வலுக்கும் எதிர்ப்பு: வீட்டு முன் போலீஸ் குவிப்பு

ஆர்.கே.நகர் வாக்காளர்களை பற்றி அவதூறாக ட்விட்டரில் பதிவிட்டதால் கமல்ஹாசன் மீது ஆர்.கே.நகர் மக்கள் காவல் துறையில் புகார் அளித்து போராட்டம் நடத்துகின்றனர். இதனால் கமல் வீட்டுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து நீண்ட நாட்களுக்கு பின் மவுனம் கலைந்த நடிகர் கமல்ஹாசன் ஆர்.கே.நகர் வாக்காளர்கள் பணத்துக்கு விலை போனார்கள் என்ற அர்த்தம் அளிக்கும் விதத்தில் பதிவிட்டிருந்தார். இதை எதிர்க்கட்சித்தலைவர்கள் பலரும் கண்டித்தனர்.

ஆர்.கே.நகர் ஏழை, எளிய மக்களை கமல்ஹாசன் அவமானப்படுத்தி விட்டார் என்று டிடிவி தினகரன் விமர்சித்தார். தங்களைப்பற்றி கமல் கூறியதற்கு கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளித்து வருகின்றனர்.

ஆர்கே.நகர் தொகுதி மக்களை இழிவாக பேசியதாக நடிகர் கமலுக்கு எதிராக இளங்கோவன் என்பவர் கோவை 2-வது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். காசிமேடு மீனவர்களும் கமல்ஹாசனுக்கு எதிராக நேற்று காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதற்கிடையே சென்னை பூந்தமல்லி பகுதியில் சிலர் கமல்ஹாசனின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர் பின்னர் அவர்கள் கமல்ஹாசனுக்கு எதிராக கோஷமிட்டு கலைந்துச் சென்றனர். இன்று ஆர்.கே.நகர் தொகுதியில் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என சிலர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தாங்கள் ஆர்.கே.நகர் பொதுமக்கள் எனவும் தங்களை நடிகர் கமல்ஹாசன் அவமானப்படுத்திவிட்டதாகவும் முழக்கமிட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீஸார் வந்து அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

கமல்ஹாசன் கருத்துக்கு எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில் துபாயிலிருந்து நேற்று சென்னை திரும்பிய கமல் மலேசிய விழாவுக்கு புறப்பட்டுச் சென்றார். கமல் ஹாசனுக்கு எதிர்ப்பு அதிகரித்து வருவதால் எல்டாம்ஸ் சாலையில் உள்ள அவரது வீட்டுக்கு போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது.

இரண்டு போலீஸ் வேன்களில் ஆயுதப்படை போலீஸார் 24 மணி நேரமும் அவர் வீட்டு முன் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x