Published : 06 Jan 2018 01:30 PM
Last Updated : 06 Jan 2018 01:30 PM

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வாருங்கள்: முதல்வர் பழனிசாமியிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டத்தை உடனே முடிவுக்குக் கொண்டு வர வலியுறுத்தியுள்ளார்.

போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து கடந்த மூன்று நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் தமிழகம் முழுதும் ஏறத்தாழ 22 ஆயிரம் பேருந்துகள் இயங்கவில்லை. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உயர்நீதிமன்றம் தடை விதித்தும் போராட்டம் தொடர்கிறது.

அரசு தரப்பு இறங்கி வந்தால் மட்டுமே போராட்டம் முடிவுக்கு வரும் என்ற நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் டெலிபோனில் பேச்சு வார்த்தை நடத்தினார். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டுகோள் வைத்துள்ளார்.

இது குறித்து திமுக சார்பில் வெளியான அறிக்கை:

“திமுகவின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (06-01-2017) முற்பகல் 11 மணிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை உடனே பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டு வந்து, தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை நீக்கி, தமிழக மக்களின் போக்குவரத்துப் பிரச்சினையைப் போக்குமாறு கேட்டுக் கொண்டார்.

மேலும், போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்காமல் உள்ள நிலுவைத்தொகை உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை உடனே நிறைவேற்றித் தருமாறு வலியுறுத்தினார். அனைத்தையும் கேட்டுக்கொண்ட முதல்வர், தொழிலாளர் பிரச்னையையும், பொதுமக்களின் நெருக்கடியையும் தீர்க்க, அரசு உடனடியாக என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது தொடர்பான விபரம் எதையும் வெளியிடவில்லை.”

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x